Homeசெய்திகள்கட்டுரைதந்தை பெரியார்: புரிதல்களும் முரண்களும் கடந்த ஒரு வரலாற்று ஆளுமை

தந்தை பெரியார்: புரிதல்களும் முரண்களும் கடந்த ஒரு வரலாற்று ஆளுமை

-

- Advertisement -

ஆன்மீக அறிஞர்கள் மீது பற்று கொண்டு, தமிழ்ச் சித்தர் மரபு, சூஃபியிசம் மற்றும் ஜென் பௌத்தம் ஆகியவற்றின் ஆழத்தைப் புரிந்துகொண்ட ஒருவர், பெரியாரை எவ்வாறு அணுகுகிறார் என்பது மிகவும் சுவாரஸ்யமானது.

we-r-hiring

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றோரின் தத்துவார்த்தத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் கூட பெரியாரை ஒரு தவிர்க்க முடியாத, மிக முக்கியமான வரலாற்று ஆளுமையாக ஏற்கும் பார்வை இங்கு விரிவடைகிறது.

கடவுள் மறுப்பும் சுயமரியாதையும்

ஐரோப்பிய நாத்திகர்களுடனோ அல்லது பண்டைய ‘சார்வாகர்’களுடனோ பெரியாரை எளிதில் சுருக்கிவிட முடியாது. அவருடைய கடவுள் மறுப்பு என்பது ஆன்மீகத் தேடலுக்கானது அல்ல; அது சமூக எதார்த்தத்தின் மீதான நேரடி விமர்சனம். அவர் கடவுளை மறுப்பதற்குக் கூறும் காரணம் அத்தகையது:

“மனுஷன் மனுஷன் தொட மாட்டீங்கிறான். கேட்டா ‘தீட்டு’ங்குறான். ‘என்னடா பெரிய தீட்டுன்னு?’ கேட்டாக்க , ‘நான் இன்ன ஜாதி ஆளுங்கிறான். ‘எங்கிருந்து வந்துச்சு ஒஞ் சாதி?’ ன்னு கேட்டாக்க மதத்தைக் கை காட்டுறான். ‘மதத்தை யாருடா படைச்சா?’ ன்னு கையைப் புடிச்சு கேள்வி எழுப்புனா, கடவுளைக் கைய காட்டுறான். அதனாலதான் ‘கடவுள் இல்ல’ங்கிறேன். மத்தபடி கடவுளுக்கும் எனக்கும் என்ன வாய்க்கால் தகராறா? அவரு நேரா வந்தா நானும் கும்புட்டுட்டுப் போயிருவேன். இதுவரைக்கும் வர்லையே ஐயா!”

எவ்வளவு கூர்மையான விமர்சனம் இது! அவருக்கு நாத்திகமும் பகுத்தறிவும் கூட இரண்டாம் பட்சம்தான்; சுயமரியாதைக்குத்தான் முதலிடம். அவர் எப்போதுமே ஒரு ‘மானமுள்ள சுயமரியாதைக்காரர்’. உடைப்பது மட்டுமே அவருடைய வேலையாக இருந்தது. அந்த வன்முறையற்ற தலைகீழ் மாற்றமும் அதிகாரப் பரவலாக்கமும்தான் தமிழகத்தின் நல் ஊழ்.

எளிய மக்களுக்கான மொழி

பெரியாரின் மட்டையடி விமர்சனங்களோ அல்லது இதிகாசங்கள் மீதான பார்வையோ ஒருபுறம் விவாதப் பொருளாகலாம். உளவியல், வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் வாசிப்புப் பயிற்சி உள்ளவர்கள் அவற்றை எளிதில் கடந்து சென்றுவிட முடியும். ஆனால், அவர் அறிவுஜீவிகளை நோக்கிப் பேசவில்லை; சுரண்டுவதையே இயல்பாகக் கொண்ட கும்பலுக்கு எதிராக, எதுவுமே அறியாத எளிய மனிதர்களை விழிப்படையச் செய்யும் நோக்கில் பேசினார் என்ற எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இட ஒதுக்கீட்டைப் பற்றி அவர் சொன்ன உதாரணம் அதற்குச் சிறந்த சான்று:

“நீங்க டிரெயின்ல ஏறுறீங்க. அங்க சில பேரு படுத்துக் கிடக்கான். ரெண்டு பேருமே உக்கார்றதுக்குத்தான் டிக்கெட் எடுத்திருக்கீங்க. நீங்க அவனை எந்திரிச்சு நிக்கச் சொல்லலை. ‘ரெண்டு பேருமே உக்காந்துக்கலாம்’னு உசுப்புறீங்க. அவ்வளவுதான். ஆனாலும் அவனுக்கு உங்க மேல கோவம் வரும். இட ஒதுக்கீட்டைப் பத்தி நான் பேசுற போதெல்லாம் பல பேரு கோவப்படறதுக்கு காரணமும் அதே மனநிலைதான்.”

ஒரு புனைவாசிரியனால் மட்டுமே யோசிக்க முடிகிற வரிகளை அவர் சர்வ சாதாரணமாகச் சொல்லிச் சென்றார்.

சில முக்கிய அவதானங்கள்

மிகை உணர்ச்சிக்கு எதிரானவர்: சங்க காலம் தொட்டு இன்று வரை ‘மிகையான புகழ்ச்சியே’ மரபாகிவிட்ட சமூகத்தில், கடவுள், மதம், சாதி, அரசியல் என எதிலுமே மிகை உணர்ச்சிக்கு எதிராக நின்றவர் அவர் மட்டுமே. மொழி சார்ந்த மிகை உணர்ச்சியைக் கூட அவர் தவிர்த்தார்.

அன்பும் உரையாடலும்: எல்லாவற்றையும் கேள்வி கேட்ட அவர் இயல்பில் ஒரு ‘தொட்டாச்சிணுங்கி’ அல்ல. மாற்றுத் தரப்பினருடன் அன்போடு உரையாடிய அவர், தன் கருத்துகளை இறுதிச் சொற்களாக ஒருபோதும் கருதவில்லை.

நடைமுறைவாதம்: வறட்டுப் பிடிவாதம் இல்லாமல், தான் நினைப்பது செயல் வடிவில் நிகழ்வதையே முதன்மையாகக் கருதினார். செயல்களை விட சொற்களுக்குக் கீழான இடத்தைத் தந்த அரசியல் தலைவர் வேறு யாருமில்லை.

பொதுவாழ்வு நேர்மை: “பொது வாழ்வில் யோக்கியமாக இருக்க வேண்டும்” என்பதை மட்டுமே அரசியலுக்கான தகுதியாக முன்வைத்தார். பதவிக்காக அலைபவர்களுக்கு மத்தியில் பதவியை உதறிவிட்டு நின்றவர். காந்தியைப் போலவே தன் பொதுப் பிம்பம் குறித்துக் கவலைப்படாமல் முழுமையான நேர்மையுடன் இயங்கினார்.

அரசியல் தாக்கம்: நேரடி கட்சி அரசியலில் ஈடுபடாமலே, தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகளைத் தன் மானசீகத் தலைவராக ஏற்கச் செய்த ஆச்சரியம் அவரிடம் நிகழ்ந்தது.

ஒரு வரலாற்று முரண்

அவர் எல்லாப் பொது நம்பிக்கைகளுக்கும் எதிராக நின்றார்; ஆனால், அப்படிப்பட்டவரை அவர் கண்மூடித்தனமாக எதிர்த்த நம்பிக்கைகளை ஏற்கும் மக்களே இன்று வரை உயர்த்திப் பிடிப்பதென்பது காலத்தின் ஆச்சரியமான முரண். சமகாலத் தமிழகத்தின் பொது உளவியலில் அவருடைய தாக்கம் நல்லதும் கெட்டதுமான இரு வேறுபட்ட விளைவுகளை உண்டாக்கியிருந்தாலும், இன்றும் அவர் தவிர்க்க முடியாத மையப் புள்ளியாக இருக்கிறார்.

“‘ஈ.வெ.இராமசாமி எனும் முட்டாள் வாழ்ந்தான்’ என்று பிறர் கருதுகிறபடி நீங்கள் அறிவுப் பூர்வமாக வாழுங்கள்”

என்பதுதான் நம்மை நோக்கிய அவருடைய இறுதிச் சாசனம். ஈ.வெ.இராமசாமி இன்னும் அறிவாளியாகவே நீடிக்கிறார். அது குறித்துச் சந்தோஷப்படுவதா அல்லது வருத்தப்படுவதா என்பது காலத்தின் கைகளில்தான் உள்ளது!

– என்.கே.மூர்த்தி

டாடா குழுமத்தின் உச்சகட்ட அதிகாரப் போர்: விரிவான பார்வை

MUST READ