தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் லண்டனில் சந்தித்துக் கொண்ட நிகழ்வை கொண்டாடும் வகையில், கோவையில் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.


லண்டன் கார் பந்தயத்தில் விஜய் – அஜித் சந்திப்பு
முதலமைச்சர் விஜய் சமீபத்தில் லண்டன் சென்றிருந்தபோது, நடிகர் அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தய நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது விஜய், அஜித்தை நேரில் சந்தித்து பேசினார். இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி நெகிழ்ச்சியுடன் உரையாடிய காட்சிகள் ரசிகர்களிடையே கவனம் பெற்றன.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் ரசிகர்களால் பகிரப்பட்டு வந்தன.
“சிவனும், சக்தியும் சேர்ந்தா மாஸ்டா!”
இந்த சந்திப்பை கொண்டாடும் விதமாக கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் ஆகிய இருவரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ள சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
“சிவனும், சக்தியும் சேர்ந்தா மாஸ்டா” என்ற வாசகத்துடன் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர்களை அஜித்குமார் ரசிகர்கள் ஒட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “கோவை மாவட்ட அஜித் தலைமை செயலகம் ரசிகர் நற்பணி மன்றம்” என்ற பெயரும் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் ரசிகர்கள் தொடங்கிய புதிய அரசியல் கட்சி
இதற்கிடையே, உளுந்தூர்பேட்டை அருகே அஜித்குமார் ரசிகர்கள் சிலர் இணைந்து புதிய அரசியல் கட்சியை தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பின்னணியில், கோவை மாவட்டத்தில் விஜய் மற்றும் அஜித் இருவரும் இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
எனினும், இந்த போஸ்டர்கள் ரசிகர்களால் லண்டன் சந்திப்பை கொண்டாடும் வகையில் ஒட்டப்பட்டவை என்பதே தற்போது வெளியாகியுள்ள தகவல். போஸ்டர்களை அடிப்படையாகக் கொண்டு வெளியாகும் அரசியல் கருத்துகள் மற்றும் ஊகங்கள் தனிப்பட்ட சமூக வலைதள கருத்துகளாகவே பார்க்கப்படுகின்றன.
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பிரசாதம்! முதல்வர் விஜய்க்கு நேரில் வழங்கிய அமைச்சர் ரமேஷ்
