செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வழக்கறிஞர் ஐ.பரந்தாமன் போட்டியிடுகிறார். அவர் இன்று மதுராந்தகம் மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட கினார், தோட்டநாவல், கே.கே.புதூர், இருசமநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் தொழில்துறை அமைச்சர் அன்பரசனுடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


அப்போது வாக்காளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் பரந்தாமன், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சியோடு இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தமக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு “நண்பா, நம்பி, நம்பி” என்று கூறி வாக்கு சேகரித்தவர்களிடம் நம்பி வாக்களித்து ஏமாந்தது போதும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் வந்திருக்கிறது என்றால், அது எதற்காக வந்திருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். இதற்காக ஒரு பெட்டியை சுட்டிக்காட்டிய அவர், தான் வைத்திருக்கும் இந்தப் பெட்டி அல்ல, இதைவிட பெரிய பெட்டி என்றும், அந்தப் பெட்டியில் என்ன இருக்கும் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவோம் என்று கூறி வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது தமிழ்நாடு முழுவதும் மாற்றம் வரவில்லை என்றும், துர்நாற்றம்தான் வீசி வருகிறது என்றும் பரந்தாமன் விமர்சித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியதாகவும், ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்த வினாடியே மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்கப்படும் என கூறியதாகவும் அவர் விமர்சனம் செய்தார். ஆனால், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மின்சார கட்டண விவகாரத்தையும் சுட்டிக்காட்டிய பரந்தாமன், மின்சாரம் என்பது தொட்டால்தான் ஷாக் அடிக்கும் நிலையில் இருந்து, தற்போது தமிழகத்தில் மின்கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார்.
தன்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பினால், தேர்தல் வாக்குறுதிகளாக கூறப்பட்ட மகளிருக்கு ரூ.2,500, இளைஞர்களுக்கு ரூ.4,000 மற்றும் இலவச சிலிண்டர் உள்ளிட்ட திட்டங்கள் என்ன ஆனது என்று முதலமைச்சரிடம் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவேன் என்றும் பரந்தாமன் தெரிவித்தார்.
மதுராந்தகம் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக, தவெக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
