செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் 3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முந்தைய செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகளை செயல்பட வைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.


செப்டம்பர் 26-ம் தேதி 4-வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால், வங்கி சேவைகள் தொடர்ந்து 5 நாட்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டது. இதைத் தவிர்க்கும் வகையில் செப்டம்பர் 27-ம் தேதி வங்கிகளை திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
செப்டம்பர் 27-ல் வங்கிகள் செயல்பட அனுமதி
மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய ஊரக வங்கிகள் செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் செயல்படும்.
மேலும், வங்கி கிளைகள், அலுவலகங்கள், ஏடிஎம் தொடர்புடைய கிளைகள் மற்றும் கரன்சி செஸ்ட்கள் செயல்பட ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு
ஆனால், ஞாயிற்றுக்கிழமை வங்கிகளை செயல்பட வைக்கும் நடவடிக்கை தொடர்பாக வங்கி ஊழியர் சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
RBI-யின் தகவலைத் தொடர்ந்து வெவ்வேறு வங்கிகள் வெவ்வேறு விதமான அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாகவும், செப்டம்பர் 27-ம் தேதி எந்த வகையான வங்கி பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதில் தெளிவு இல்லை என்றும் United Forum of Bank Unions (UFBU) தெரிவித்துள்ளது.
“RBI அறிவித்தால் பணியாற்றுவோம்”
ஞாயிற்றுக்கிழமை வங்கிகளை திறப்பது தொடர்பாக தெளிவான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, அதன்படி பணியாற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் ஊழியர்கள் பணிக்கு வருவார்கள் என வங்கி சங்கங்கள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில், All India Bank Officers’ Association உள்ளிட்ட சில சங்கங்கள், செப்டம்பர் 27-ம் தேதி விடுமுறை நாளாக இருப்பதால் தங்களது உறுப்பினர்கள் பணிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதற்காக வங்கி வேலைநிறுத்தம்?
வங்கி ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக 5 நாள் வங்கி வேலை வாரம் உள்ளது. தற்போது 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவித்து, 5 நாள் வேலை வாரத்தை அமல்படுத்த வேண்டும் என்று சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
மேலும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் வங்கி சங்கங்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசுடன் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையில் உறுதியான முன்னேற்றம் ஏற்படாததால் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை வேலைநிறுத்தம் தொடரும் என UFBU தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
செப்டம்பர் 27-ம் தேதி வங்கிகள் செயல்படுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், வேலைநிறுத்தத்திற்கு முன்பாக வாடிக்கையாளர்கள் முக்கியமான கிளை சார்ந்த பணிகளை முடித்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதேவேளை, வேலைநிறுத்த காலத்தில் மொபைல் பேங்கிங், இணையவழி வங்கி சேவை, ஏடிஎம் மற்றும் UPI போன்ற டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துமாறு பல வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
செப்டம்பர் 30-ம் தேதி வங்கிகளின் அரையாண்டு நிறைவு பணிகளும் நடைபெற உள்ளதால், அந்த காலகட்டத்தில் வங்கி சேவைகளில் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
