2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் கபடி அணி மீண்டும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரானை 40-34 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.


பரபரப்பாக நடைபெற்ற முதல் பாதியில் இந்தியா மற்றும் ஈரான் அணிகள் மாறி மாறி புள்ளிகளைப் பெற்றன. முதல் பாதியின் முடிவில் ஈரான் 18-17 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இதையடுத்து இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்திய அணியின் தடுப்பாட்டம் மற்றும் ரெய்டுகளில் கிடைத்த முக்கிய புள்ளிகள் அணியின் முன்னிலையை அதிகரிக்க உதவின. சுமித் மற்றும் அர்ஜுன் தேஷ்வால் ஆகியோரின் பங்களிப்பும் இந்திய அணியின் வெற்றியில் முக்கியமாக அமைந்தது.
ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 20-20 என சமநிலையில் இருந்த நிலையில், இந்திய அணி தொடர்ந்து புள்ளிகளை சேர்த்து முன்னிலை பெற்றது. இறுதியில் 40-34 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் கபடி தங்கத்தை இந்தியா தக்க வைத்துக் கொண்டது.
இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆண்கள் கபடி அணி 9-வது முறையாக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு ஈரான் முற்றுப்புள்ளி வைத்திருந்த நிலையில், 2023 ஹாங்சோ போட்டியில் இந்தியா மீண்டும் தங்கத்தை கைப்பற்றியது. தற்போது 2026 ஆசிய விளையாட்டிலும் தங்கத்தை தக்க வைத்துள்ளது.
முன்னதாக நடைபெற்ற மகளிர் கபடி இறுதிப்போட்டியிலும் இந்திய அணி ஈரானை 37-34 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றிருந்தது. இதன் மூலம் 2026 ஆசிய விளையாட்டில் இந்தியா ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு கபடி பிரிவுகளிலும் தங்கப் பதக்கத்தை வென்று ‘கோல்டன் டபுள்’ சாதனையைப் பதிவு செய்துள்ளது.
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்!
