பங்களாதேஷின் ரூப்பூர் அணுமின் நிலையத்திற்குத் தேவையான அணு எரிபொருளை ஏற்றிச் சென்ற ரஷிய சரக்கு விமானம், பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதால் திட்டமிட்டபடி பங்களாதேஷை சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


ரஷியாவின் அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் தயாரித்த அணு எரிபொருளை ஏற்றிச் சென்ற இந்த சிறப்பு சரக்கு விமானம், அஜர்பைஜான், கஜகஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாக டாக்காவை சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் கடைசி நேரத்தில் தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி வழங்காததால் சரக்கு போக்குவரத்து தாமதமடைந்துள்ளது.
செப்டம்பர் 24-ல் சென்றடைய வேண்டிய அணு எரிபொருள்
ரூப்பூர் அணுமின் நிலையத்திற்கான இந்த அணு எரிபொருள் சரக்கு செப்டம்பர் 24-ம் தேதி பங்களாதேஷை சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தானின் வான்வெளி அனுமதி கிடைக்காததால் திட்டமிட்ட தேதியில் சரக்கை கொண்டு செல்ல முடியவில்லை.
பங்களாதேஷ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபகிர் மக்புப் அனாம், இந்த தாமதத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
தொழில்நுட்ப காரணம் என பாகிஸ்தான் விளக்கம்
வான்வெளி அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பாகிஸ்தான் தரப்பில் தொழில்நுட்ப மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக அனுமதி தாமதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் பாதை தொடர்பான தொழில்நுட்ப ஏற்பாடுகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு காரணமாக மாற்றங்கள் ஏற்பட்டதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம் என்றும் அந்த நாடு தெரிவித்துள்ளது.
மாற்றுப் பாதையை தேடும் ரோசாட்டம்
பாகிஸ்தானின் அனுமதி மறுப்பைத் தொடர்ந்து, ரஷியாவின் ரோசாட்டம் நிறுவனம் அணு எரிபொருளை பங்களாதேஷுக்கு கொண்டு செல்வதற்கான மாற்றுப் பாதையைத் தேடி வருகிறது.
அக்டோபர் மாதம் முதல் மாற்றுப் பாதை வழியாக அணு எரிபொருள் விநியோகத்தை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள எரிபொருள் சரக்குகளை டிசம்பர் மாதத்திற்குள் பல்வேறு சரக்கு விமானங்கள் மூலம் பங்களாதேஷுக்கு கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூப்பூர் அணுமின் நிலையம்
பங்களாதேஷின் முதல் அணுமின் நிலையமான ரூப்பூர் அணுமின் நிலையத்தில் இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரஷியாவின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நாட்டில் மின்சார தேவையும் பற்றாக்குறையும் அதிகரித்துள்ள நிலையில், ரூப்பூர் அணுமின் நிலையத்தின் பணிகளை விரைந்து முடித்து மின் உற்பத்தியை தொடங்க பங்களாதேஷ் முயற்சி செய்து வருகிறது.
அணு எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்த தாமதம் திட்டத்தின் செயல்பாட்டு அட்டவணையில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ரோசாட்டம் தரப்பில் ஒட்டுமொத்த திட்ட அட்டவணை பாதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
