நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் மட்டும் இதுவரை 1,453 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 5,285 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேபாளம்-திபெத் எல்லைக்கு அருகே கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி இமயமலைப் பகுதியில் பனிப்பாறை உடைந்து, போடேகோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்பட்ட சேறு, சகதி மற்றும் பாறைகள் காரணமாக வீடுகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்தன. நீர்மின் திட்டங்களும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.
1,453 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் மாயம்
இந்த பேரழிவில் இதுவரை 1,453 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் பலரின் உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்ததால், மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும் ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. காணாமல் போனவர்களை தேடும் பணி ஆறுகள், நீர்மின் திட்டங்கள் மற்றும் இடிபாடுகள் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திபெத்திலும் பெரும் உயிரிழப்பு
வெள்ளப்பெருக்கால் சீனாவின் திபெத் பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் சீன ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் ஏற்பட்ட இந்த பேரழிவில் சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சிக்கினர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் உள்கட்டமைப்புகளையும் கடுமையாக பாதித்துள்ளது.
வர்த்தகக் கப்பல்களை குறிவைப்பது ஏற்க முடியாது – ஐநாவில் ஜெய்சங்கர்
