இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். சாதியக் கட்டமைப்பு, ஆணாதிக்கச் சமூகம் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களின் அடையாளம் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.


‘டோரதி’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
படத்தைப் பார்த்த நடிகர் சூர்யா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “டோரதி பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சொல்ல வேண்டியதைத் திறம்படச் சொல்லியிருக்கிறார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், படத்தில் நடித்துள்ள கீர்த்தி, சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோரின் நடிப்பையும் சூர்யா பாராட்டியுள்ளார். அவர்களது நடிப்பு திரைப்படத்திற்கு மேலும் உயிர் சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் இசையையும் சூர்யா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். “இசைஞானி இளையராஜாவின் இசை மனதை நெகிழ வைக்கிறது” என்று பாராட்டியதுடன், ‘டோரதி’ படக்குழுவினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
‘டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியான பிறகு திரையுலகைச் சேர்ந்த பலரும் படக்குழுவினரின் முயற்சியைப் பாராட்டி வருகின்றனர். இயக்குநர் மணிரத்னமும் ‘டோரதி’ படத்தையும் கார்த்திக் சுப்பராஜின் படைப்பாற்றலையும் பாராட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் பாராட்டும் தற்போது கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக படத்தின் கதைக்களம் மற்றும் நடிகர்களின் நடிப்பு குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துகள் ‘டோரதி’ படக்குழுவினருக்கு கிடைத்துள்ள மற்றொரு முக்கியமான பாராட்டாக அமைந்துள்ளது.
‘டோரதி’ கதை திருட்டு புகார்! இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது போலீஸ் கமிஷனரிடம் மனு!
