தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள மெடிப்பள்ளி பகுதியில் பிரபல நகைக்கடையில் மர்ம நபர்கள் புகுந்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த கொள்ளை சம்பவம் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது. மெடிப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள நகைக்கடையின் ஷட்டரை தூக்கி உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த தங்கம் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்ட நகைகளை அள்ளிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
முதற்கட்ட விசாரணையில், இந்த கொள்ளையில் குறைந்தது 7 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
நகைக்கடை உரிமையாளர் கடையில் இருந்த பொருட்களின் இருப்பை சரிபார்த்த பின்னர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் சுமார் 1.4 கிலோ எடையுள்ள வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தடயவியல் குழுவினர் நகைக்கடைக்கு சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் 5 தனிப்படை குழுக்களை அமைத்துள்ளனர். கொள்ளை திட்டமிட்டு நடத்தப்பட்டதா, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஹைதராபாத்தில் உள்ள மற்றொரு காரட்லேன் நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 300-க்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகள் திருடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவமும் மெடிப்பள்ளி பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை!
