Homeசெய்திகள்தமிழ்நாடுஅனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் மறுப்பு!

அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் மறுப்பு!

-

- Advertisement -

முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பதாகத் தொடரும் குற்றச்சாட்டுகளுக்குப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தாங்கள் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் எப்போதும் கிடைக்கக்கூடியவர்களே என்று விளக்கமளித்தார்.

we-r-hiring

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்த முக்கிய விவரங்கள் வருமாறு:

தொடர் சந்திப்புகள்: “நான் தொடர்ச்சியாகச் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறேன். எளிய பின்னணியில் இருந்து வந்த ஒருவருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாய்ப்பளித்துள்ளார். சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்களே, நாங்கள் சந்திக்கக்கூடாதா? நாங்கள் வேறு கிடையாது, அனைவருக்கும் வாய்ப்பு தரப்படுகிறது” என்றார்.

அமைதியான இடைத்தேர்தல்: சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் குறித்துப் பேசிய அவர், “சிங்கப்படை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது; நீண்ட காலத்திற்குப் பின்பு இதனுடைய பிரதிபலனை மக்கள் பார்ப்பார்கள். முதல் முறையாக இடைத்தேர்தலில் எந்தவித அசம்பாவிதமும், வன்முறையும் இல்லாமல் தேர்தல் நடைபெற்றுள்ளது. பொதுவாக ஆளுங்கட்சியினர் பூத்துகளை அடித்து நொறுக்குவார்கள், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள்.

ஆனால், மிக அமைதியான மற்றும் கண்ணியமான முறையில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சரியான இடைத்தேர்தல் இப்போதுதான் நடந்திருக்கிறது; இனிவரும் காலங்களிலும் இது தொடரும்” என்று பெருமிதம் தெரிவித்தார்.

வதந்திகளைத் தவிர்க்க வேண்டுகோள்: ஊடகங்களின் பணி குறித்துக் குறிப்பிட்ட அமைச்சர், “ஜனநாயகத்தின் மிக முக்கியமான தூண்களான ஊடகத்துறையில் நானும் ஒரு காலத்தில் ஃப்ரீலான்சராகப் பணியாற்றியிருக்கிறேன். தயவுசெய்து செய்திகளின் உண்மைத் தன்மையைச் சரிபாருங்கள்.

யாரோ ஒரு டிபன் பாக்ஸில் எதையோ ஒட்டிவிட்டு, வாட்ஸ்அப்பில் அனுப்பும் வதந்திகளை வைத்துக்கொண்டு இதற்கு முன்பான ஆட்சியாளர்கள் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டனர். அழகர்கோவிலில் இந்தி எழுத்துகள் இருப்பதாக வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களைப் பிரதான செய்தி நிறுவனங்களே வெளியிடுகின்றன. அனைத்து ஊடகங்களும் உண்மைத் தன்மையை முழுமையாக ஆராய்ந்த பின்னரே செய்திகளை வெளியிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மக்கள் மன்றமே பிரதானம்: மக்கள் மன்றம் என்பது சட்டமன்றம் அல்ல, எதிர்க்கட்சிகளுடன் போட்டி போடுவதற்காக அல்ல என்றும், அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டுவரும் விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து அவர்களின் கருத்துகள் பெறப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அனைவருக்கும் ஏற்ற முடிவுகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் விரைவில் எடுப்பார் என்றார்.

“மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெறும்” – வாக்குப்பதிவு நாளில் பரந்தாமன் நம்பிக்கை!

MUST READ