இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் அரஃபத் ஷேக், அமெரிக்காவின் வாஷிங்டன் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


அலெக்சாண்ட்ரியா, விர்ஜீனியாவில் வசித்து வரும் 42 வயதான அரஃபத் ஷேக், கடந்த செப்டம்பர் 24-ம் தேதி டல்லஸ் விமான நிலையத்திற்கு வந்தபோது ICE அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டதாக அவரை விடுவிக்கக் கோரி செயல்பட்டு வரும் ‘Free Arafat Sheikh’ பிரசாரம் தெரிவித்துள்ளது.
மாணவர் விசாவில் அமெரிக்கா சென்றவர்
அரஃபத் ஷேக் கடந்த 2019-ம் ஆண்டு மாணவர் விசாவில் அமெரிக்கா சென்றதாகவும், ஜார்ஜியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் தொடர்பான மேற்படிப்பைத் தொடர்ந்ததாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர் 2020-ம் ஆண்டு தஞ்சம் கோரி விண்ணப்பித்ததாகவும், அவரது குடியேற்ற விண்ணப்பம் நிலுவையில் இருப்பதாகவும் பிரசாரக் குழு கூறியுள்ளது.
ஆவணங்களை காட்டியபோதும் கைது?
விமானத்தில் இருந்து இறங்கிய சிறிது நேரத்திலேயே ICE அதிகாரிகள் அவரைச் சூழ்ந்து காவலில் எடுத்ததாகவும், அப்போது அவர் தனது குடியேற்ற ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்ததாகவும் ‘Free Arafat Sheikh’ பிரசாரம் குற்றம்சாட்டியுள்ளது.
அவரை விடுவிக்கக் கோரி ஆதரவாளர்கள் ஆன்லைனில் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளனர். இருப்பினும், கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து ICE அல்லது அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை இதுவரை விரிவான விளக்கம் அளிக்கவில்லை.
திரைப்பட இயக்குநராக அறிமுகம்
அரஃபத் ஷேக் இயக்கிய முதல் முழுநீள திரைப்படமான ‘Saffron Kingdom’, காஷ்மீரில் மோதல், இடம்பெயர்வு மற்றும் அடையாளம் போன்ற விவகாரங்களை மையமாகக் கொண்டதாகும். இந்தப் படத்திற்காக பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டு Teaneck International Film Festival-ல் அவருக்கு ‘Emerging Filmmaker Activist’ விருதும் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது விர்ஜீனியாவில் உள்ள Caroline Detention Facility-யில் அவர் வைக்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கான குடியேற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
