Homeசெய்திகள்உலகம்நைஜீரியாவில் ராணுவ விமானம் ஆற்றில் விழுந்து கோர விபத்து – 32 பேர் பலி!

நைஜீரியாவில் ராணுவ விமானம் ஆற்றில் விழுந்து கோர விபத்து – 32 பேர் பலி!

-

- Advertisement -

நைஜீரியாவில் ராணுவ விமானம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 32 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பெனின் நகரில் இருந்து லாகோஸ் நோக்கி ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 25 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் என மொத்தம் 32 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒன்டோ மாகாணத்தில் உள்ள இக்போகோடா பகுதியில், கடற்படை தளத்திற்கு அருகே விமானம் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்னர் விமானம் ஆற்றுப்பகுதி மற்றும் சதுப்பு நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். விமானத்தின் சிதைந்த பாகங்கள் தண்ணீரில் காணப்பட்டதுடன், உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள், ஆடைகள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட பொருட்களும் அப்பகுதியில் கிடந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என நைஜீரிய அதிபர் போலா டினுபு உறுதி செய்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், விபத்துக்கான காரணத்தை கண்டறிய நைஜீரிய விமானப்படை உடனடியாக விரிவான விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

விமானம் வழக்கமான பணிக்காக பெனின் நகரில் இருந்து லாகோஸ் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நைஜீரியாவில் சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்நாட்டு அரசு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், விமான பாதுகாப்பு தொடர்பான கேள்விகளும் எழுந்துள்ளன.

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சிங்கப்பூர் அரசின் புதிய முயற்சி: அரசு ஊழியர்களுக்காக ‘FirstDate’ டேட்டிங் ஆப்!

MUST READ