வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், யூடியூபர் துருவ் ராட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வு பெங்களூருவில் உள்ள ஃப்ரீடம் பார்க்கில் நடைபெற்றது.


SIR குறித்து மக்கள் தீர்ப்பாயம்
CJP நிறுவனர் அபிஜீத் திப்கே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், SIR நடவடிக்கையால் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து தவறாக நீக்கப்பட்டதாகக் கூறும் கர்நாடகாவைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் “People’s Tribunal” நடத்தப்பட்டது.
வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை தொடர்பாக பொதுமக்கள் எழுப்பும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரகாஷ் ராஜ், துருவ் ராட்டி பங்கேற்பு
நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த போராட்டத்தில் பங்கேற்று, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும் என முன்னதாக சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.
அதேபோல், யூடியூபர் துருவ் ராட்டியும் பெங்களூரு போராட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்திருந்தார். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் என அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்
SIR நடவடிக்கை தொடர்பான தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
SIR செயல்முறையில் வாக்காளர் பெயர்கள் தவறாக நீக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பதும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக முன்வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
‘சப்பல்’ போராட்டமும் நடைபெற்றது
மக்கள் தீர்ப்பாயத்தைத் தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ‘சப்பல் போராட்டம்’ நடத்தப்படும் என CJP தரப்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் இளைஞர் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் SIR நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாகக் கூறும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சிகள்
போராட்டத்தில் பிரகாஷ் ராஜ், துருவ் ராட்டி உள்ளிட்டோர் பங்கேற்ற காட்சிகள் மற்றும் அவர்கள் வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
பெங்களூருவைத் தொடர்ந்து அக்டோபர் 10-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மற்றொரு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக CJP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
