வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் (SIR) பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தீவிரமடைந்துள்ளது.


காங்கிரஸின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்களின் மதிய உணவு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பேரணியாக ராஜ் காட்டை நோக்கிப் புறப்பட்டனர். முன்னதாக, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தில்லி காவல்துறை அனுமதி மறுத்ததையடுத்து, மகாத்மா காந்தியின் சமாதினமான ராஜ் காட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
போராட்டக் களத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “எங்களை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு முன்பும் போராட விடவில்லை, ஜந்தர் மந்தரிலும் அனுமதிக்கவில்லை. நரேந்திர மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் மற்றும் மோகன் பகவத் ஆகியோர் ஒரு கிரிமனல் சதி மூலம் இந்தியாவைக் கைப்பற்றி, அரசமைப்புச் சட்டத்தை அழித்து, வாக்குகளைத் திருடியுள்ளனர். இந்த நால்வரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD), சமாஜ்வாதி கட்சி (SP) உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
காவல்துறை குவிப்பு – மோதல்களும் முறுகலும்
செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய தலைமையகமான நிர்வாச்சன் சதன் நோக்கி எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணி அகில இந்திய வானொலி நிலையம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டது. புதன்கிழமையன்று ஜந்தர் மந்தர் நோக்கிச் செல்ல முயன்ற தலைவர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்போது தில்லியின் மத்தியப் பகுதிகளில் மத்திய ஆயுதப் படை போலீசாரும், விரைவுப் படை (RAF) வீரர்களும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, போராட்டக்காரர்களின் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாள்வதைக் கண்டித்து பல பத்திரிகையாளர் அமைப்புகள் தில்லி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளன.
நாளை குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
தலைமைத் தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் நாளை (அக்டோபர் 9) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளனர். மேலும், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரி இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
டெல்லி மட்டுமின்றி, பெங்களூரு, அகர்தலா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் ஆணையரைக் கண்டித்து போராடிக் குரல்கள் எழுப்பப்பட்டு வருவதால் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
