Homeசெய்திகள்தமிழ்நாடுவிமான பயணம் போல விண்வெளி சுற்றுலா: ஏழைகளுக்கும் சாத்தியமாகும் காலம்!

விமான பயணம் போல விண்வெளி சுற்றுலா: ஏழைகளுக்கும் சாத்தியமாகும் காலம்!

-

- Advertisement -

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) சதீஷ் தவான் விண்வெளி மையம் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் உலக விண்வெளி வார விழா தொடங்கியது.

we-r-hiring

விழாவை சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இணை இயக்குநர் சங்கரன் மற்றும் திட்ட இயக்குநர் சரவணப் பெருமாள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

நடப்பாண்டு “ராக்கெட் புரட்சி” என்ற கருப்பொருளில் நடைபெறும் இவ்விழாவில், ராக்கெட் தொழில்நுட்ப வளர்ச்சி, விண்வெளிப் பயணத்தின் எதிர்காலம், செயற்கைக்கோள்களின் பயன்பாடு மற்றும் மனித வாழ்க்கை மேம்பாட்டில் விண்வெளி ஆய்வுகளின் பங்கு குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விளக்கப்படுகிறது.

மேலும், மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும், விண்வெளித் தொழில்நுட்பத்தில் ஈடுபாட்டையும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

விழாவில் பேசிய திட்ட இயக்குநர் சரவணப் பெருமாள்,

விண்வெளித் துறையில் உலக நாடுகளிடையே போட்டி அதிகரித்து வருவதால் விண்வெளிப் பயணம் படிப்படியாக எளிதாகி வருகிறது என்றார்.

தற்போது சுமார் ரூ.300 கோடி செலவில் விண்வெளிக்கு சென்று வரும் சூழல் உருவாகியுள்ளதாகவும், வரும் 10 ஆண்டுகளுக்குள் விமானத்தில் பயணம் செய்வதைப் போன்று ஏழை, எளிய மக்களும் விண்வெளி சுற்றுலா செல்லும் நிலை உருவாகும் என்றும் தெரிவித்தார்.

2023-ஆம் ஆண்டுக்கு முன்பு இஸ்ரோ மட்டுமே ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வந்த நிலையில், தற்போது புதிய சட்டங்கள் மற்றும் திட்டங்களின் மூலம் தனியார் நிறுவனங்களும் விண்வெளித் துறையில் ராக்கெட்டுகளை உருவாக்கி ஏவக்கூடிய அளவிற்கு இந்தியா முன்னேறியுள்ளதாக கூறினார்.

இந்தியாவில் தற்போது 145 விண்வெளி சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு தாங்களும் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கி பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாடு பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் முன்னேற தொழில்நுட்ப வளர்ச்சி முக்கியமானது என்றும், நாட்டின் பாதுகாப்பிலும் விண்வெளித் துறை முக்கிய பங்காற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

முப்படைகளைப் போன்று எதிர்காலத்தில் விண்வெளிப் படையும் நான்காவது படையாக உருவாகும் சூழல் ஏற்பட்டு வருவதாகவும், பல்வேறு நாடுகளில் இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகவும் சரவணப் பெருமாள் தெரிவித்தார். விண்வெளியில் செயல்படும் முக்கியமான தொழில்நுட்ப சாதனங்களை பாதுகாப்பதும் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை அண்ணா சாலையில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!

MUST READ