தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்யும் வகையில் பேசியதாக கூறி, திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தவெக மகளிரணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் சத்யபாமா குறித்து மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக தரப்பில் ஏற்கனவே தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையிடம் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், திருச்சி மாவட்ட தவெக மகளிரணி சார்பில் ஸ்ரீரங்கம், தில்லைநகர், அரசு மருத்துவமனை காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் மு.க.ஸ்டாலின் மீது புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. சத்யபாமாவை இழிவுபடுத்தும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக புகார் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண் வேட்பாளரின் அரசியல் கொள்கைகள் மற்றும் தேர்தல் நிலைப்பாடுகள் குறித்து விமர்சிப்பதற்கு பதிலாக, அவரது உடல் தோற்றத்தை கேலி செய்யும் வகையில் பேசியதாக தவெக மகளிரணியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், இதுபோன்ற கருத்துகள் பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் மு.க.ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புகார்களைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் CSR வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சத்யபாமா குறித்த பேச்சு தொடர்பாக தவெக வழக்கறிஞர் அணியும் ஏற்கனவே தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் 22 தங்கம் உட்பட 62 பதக்கங்கள்.. உலக சிலம்பப் போட்டியில் இந்தியா அசத்தல்!
