சென்னை, தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
மேலும், மூத்த ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகச் செயல்பட்டு வரும் மூன்று கல்வி அமைப்புகளுக்கும் நிதியுதவி அறிவிக்கப்பட்டது.

1979-ல் தொடங்கப்பட்ட கல்விச் சேவை!
திரைக்கலைஞர் சிவகுமார், 1979-ஆம் ஆண்டு தனது 100-வது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திற்காகப் பெற்ற முழுச் சம்பளமான ரூ.25,000-ஐ வங்கியில் முதலீடு செய்து, அதன் வட்டித் தொகையின் மூலம் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த அறக்கட்டளையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி வந்த அறக்கட்டளை, பின்னர் கல்வி உதவித்தொகைகளையும் வழங்கத் தொடங்கியது.
2006-ஆம் ஆண்டு முதல் அகரம் ஃபவுண்டேஷன் இந்த அறக்கட்டளையின் பொறுப்பை முழுமையாக ஏற்று, ஆண்டுதோறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகைகளையும், கலைத்துறையில் சிறந்து விளங்கும் மூத்த ஓவியர்களுக்கு விருதுகளையும் வழங்கி வருகிறது.
ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் விருது!
ஓவியத் துறையில் நீண்டகாலமாகச் சிறப்பாகப் பங்களித்து வரும் மூத்த கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் சிவகுமார் கல்வி அறக்கட்டளை விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு ஓவியர்கள் அம்புலிமாமா சங்கர், ராமு, ஜெயராஜ், மாயா, மணியம் செல்வன் உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழாவில் சிறந்த ஓவியரும், கலைத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருபவருமான ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
25 மாணவர்களுக்கு தலா ரூ.10,000 கல்வி உதவி!
பொருளாதாரச் சவால்களைக் கடந்து பிளஸ்-டூ பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2.50 லட்சம் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மாணவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மூன்று கல்வி அமைப்புகளுக்கு ரூ.11.28 லட்சம் நிதியுதவி!
விளிம்புநிலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகச் செயல்பட்டு வரும் மூன்று அமைப்புகளுக்கும் அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
திண்டிவனம் ரோசனை பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாகத் தாய்மொழி வழிக் கல்வியை முன்னெடுத்து வரும் ‘தாய் தமிழ் தொடக்கப்பள்ளி’க்கு, 2026–2027 கல்வியாண்டில் ஆசிரியர்களின் மாதச் சம்பளப் பங்களிப்பிற்காக ரூ.6.28 லட்சம் வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் அளிக்கப்பட்டது. இந்தப் பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்வியுடன் மதிய உணவையும் வழங்கி வருகிறது. கடந்த 16 ஆண்டுகளாக அகரம் ஃபவுண்டேஷன் இப்பள்ளிக்கு ஆதரவளித்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பழங்குடியினக் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ‘சுடர்’ அமைப்புக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. சத்தியமங்கலம், பர்கூர் மலைப்பகுதிகளில் பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய குழந்தைகளை மீண்டும் கல்வியில் இணைப்பதற்கும், அவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்கும் இந்த அமைப்பு 25 மாலைநேரப் படிப்பகங்களை நடத்தி வருகிறது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் உள்ள ஏழு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து கல்விப் பணிகளை மேற்கொண்டு வரும் ‘வாழை’ அமைப்புக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் அளிக்கப்பட்டது. இந்த அமைப்பு தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளது.
கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் எங்கும் சாதிக்கலாம்– சிவகுமார்
விழாவில் மாணவர்களிடம் பேசிய திரைக்கலைஞர் சிவகுமார், கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் சாதிக்க முடியும் என்று வலியுறுத்தினார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள், பெற்றோரை இழந்தவர்கள் அல்லது கிராமப்புறங்களில் வளர்ந்தவர்கள் என்ற பின்னணியைப் பற்றி கவலைப்படாமல், கல்வியில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தனது இளமைக்காலக் கல்வி அனுபவங்களை நினைவுகூர்ந்த அவர், கிராமத்தில் போதிய பள்ளிக் கட்டிட வசதிகள் இல்லாத சூழலில் படித்ததையும், குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாகத் தனது சகோதரியின் கல்வி பாதிக்கப்பட்டதையும் எடுத்துரைத்தார். தந்தையை இழந்த நிலையில், கடினமாக உழைத்து தன்னைப் படிக்க வைத்த தாயின் முயற்சிகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.
ஏழ்மையான குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்கள் கல்விக்காக எதிர்கொள்ளும் சிரமங்களைத் தாம் நன்கு அறிந்திருப்பதாகக் குறிப்பிட்ட சிவகுமார், தடைகளைத் தாண்டி மாணவர்கள் பெறும் ஒவ்வொரு வெற்றியும் அவர்களுடைய வாழ்க்கையில் புதிய தொடக்கமாக அமையும் என்றார். கிடைத்துள்ள முதல் வெற்றியுடன் நின்றுவிடாமல், தொடர்ந்து உழைத்து தங்களுக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வாழ்க்கையில் எப்போதும் இன்னொரு வாய்ப்பு இருக்கிறது – சூர்யா
விழாவில் பேசிய நடிகர் சூர்யா, ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47 ஆண்டுகாலப் பயணத்தை ஒரு குடும்பத்தின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டார். ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவி பெறும் மாணவர்களின் சாதனைகளையும், அவர்கள் கடந்து வந்த சவால்களையும் பார்க்கும்போது பெருமையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
அகரம் ஃபவுண்டேஷன் கடந்த 20 ஆண்டுகளில் முதல் தலைமுறை மாணவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 7,000 பேரைச் சென்றடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மலைப்பகுதிகள், கடலோரக் கிராமங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கல்வி வாய்ப்புகள் தேவைப்படும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவ வேண்டிய அவசியம் இன்னும் அதிகமாக இருப்பதாகவும் கூறினார்.
திரைத்துறையில் இருந்து கற்றுக்கொண்ட அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்ட சூர்யா, ஒரு செயலில் தோல்வி ஏற்பட்டால் அதையே முடிவாகக் கருதாமல், மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்றார். திரைப்படங்களில் ஒரு காட்சி சிறப்பாக அமைய பலமுறை ஒத்திகை மேற்கொள்வதைப் போல, வாழ்க்கையிலும் தொடர்ச்சியான பயிற்சியும் விடாமுயற்சியும் வெற்றிக்கு முக்கியம் என விளக்கினார்.
மேலும், ஒருவர் வெற்றி பெறுவதற்குப் பின்னால் பலருடைய உழைப்பும் பங்களிப்பும் இருப்பதை மறந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தினார். தமக்கு உதவியவர்களை நினைவில் வைத்துக்கொள்வதுடன், வாழ்க்கையில் முன்னேறிய பிறகு மற்றொருவரையும் உயர்த்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றார். சமூக ஊடகக் காணொளிகளை மட்டும் பார்த்து நேரத்தைச் செலவிடாமல், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் அவர்களின் பயணங்களையும் அறிந்துகொள்வது மாணவர்களுக்கு உதவும் என்றும் அறிவுறுத்தினார்.
கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கம்
விழாவில் மாணவர்கள், கலைஞர்கள், சிறப்பு விருந்தினர்கள், அகரம் ஃபவுண்டேஷன் தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிப்பதுடன், பொருளாதார மற்றும் சமூகத் தடைகளால் கல்வி வாய்ப்புகளை இழக்கும் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
அடேங்கப்பா… சோழர் காலத்தில் இவ்வளவு பொருட்களா? சென்னையில் மக்களைக் கவரும் ‘சோழ தேசம்’ கண்காட்சி!
