Homeசெய்திகள்வானிலைதமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு! மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்...

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு! மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் – வானிலை மையம் எச்சரிக்கை!

-

- Advertisement -

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 12) நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்தப் பகுதிகளில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சியின் காரணமாக, அக்டோபர் 13-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வரும் நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்கான மழை முன்னறிவிப்பு

அக்டோபர் 13-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

அக்டோபர் 14-ம் தேதி சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். அக்டோபர் 15-ம் தேதி கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.

நாளை சென்னையின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை இல்லை

தமிழகக் கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு தற்போது மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ