கோவையில் பள்ளி மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சாதிய பாகுபாடே அவரது தற்கொலைக்குக் காரணம் எனப் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு ஆசிரியர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாணவனின் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
கோவை பீளமேடு, கொடிசியா அருகே உள்ள கே.கே. நாயுடு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் அகிலன், கடந்த 21-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சாதிய பாகுபாடு காரணமா? பெற்றோர் புகார்
மாணவன் அகிலனின் தற்கொலைக்கு அவர் படித்த பள்ளியில் நடந்ததாகக் கூறப்படும் சாதிய பாகுபாடே காரணம் என அவரது பெற்றோர் அசோக்குமார், கௌசல்யா தேவி ஆகியோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில், வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மாணவனின் சாதி தொடர்பாகவும் உணவு விவகாரம் குறித்தும் பேசியதாகவும், இதன் தொடர்ச்சியாக மற்ற மாணவர்கள் அகிலனைத் தங்களுடன் சேர்த்துக்கொள்ளாமல் தனிமைப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் அருண்குமாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு மாணவர்கள் கைது – சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பு
இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மற்றும் இரண்டு மாணவர்களைக் கைது செய்ய வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.
இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக இரண்டு மாணவர்களைப் போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சம்பந்தப்பட்ட இரண்டு ஆசிரியர்களையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மாணவனின் உடலைப் பெற்றுக்கொள்ள பெற்றோர் மறுத்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்
இரண்டு ஆசிரியர்களையும் கைது செய்ய வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் மாணவனின் பெற்றோர் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, இன்று காலை முதல் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெற்றோர், உறவினர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் பாதுகாப்புப் பணி
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அமர்வதற்காக அங்கு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கோவை மாநகர உதவி காவல் ஆணையர் கோகுலகிருஷ்ணன் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாணவன் அகிலனின் மரணம் தொடர்பாகப் பெற்றோர் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற வேண்டிய நிலையில், இரண்டு ஆசிரியர்களையும் கைது செய்ய வேண்டும்; அதுவரை மாணவனின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
