
சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, வேப்பேரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் காரசாரமாகப் பேட்டியளித்தார்.
காவல் நிலைய ஆஜர் மற்றும் பின்னணி:
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு, காவல் ஆணையர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தகவலைத் தொலைக்காட்சியில் பார்த்து விட்டு அவரைச் சந்திக்கச் சென்றதாகக் குறிப்பிட்ட சேகர்பாபு, அங்கு நின்றிருந்த காவல் ஆய்வாளரின் அணுகுமுறை சரியில்லாததால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனால் தன் மீது வழக்குப் பதிவு செய்து சம்மன் அனுப்பப்பட்டதால், சட்டத்தை மதிக்கும் திமுகவின் உறுப்பினராக வேப்பேரி உதவி ஆணையர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்ததாகவும் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு கூறினார். காவல்துறையினர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதில்களைப் பதிவு செய்துள்ளதாகவும், மீண்டும் அழைத்தால் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

“திமுக ஆலமரம்; மிரட்டல்களுக்கு அஞ்சாது”:
காவல்துறையின் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரான பின்னர் வேப்பேரி காவல் நிலையத்தின் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் காரசாரமாகப் பேட்டியளித்தார். அவர் தெரிவித்த முக்கியக் கருத்துகள்:
- திமுக நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. நூறாண்டுகள் பழமையான அடையாறு ஆலமரம் போன்று 78 ஆண்டுகள் கடந்த இயக்கம் திமுக.
எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், மரணத்தின் விளிம்பில் இருந்தாலும் கூட ‘திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்க’ என்றுதான் எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும்.
- நீதிமன்றமே டி.கா.சரவணன் கைதிற்கு கொட்டு வைத்துவிட்டது. எத்தனை அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டாலும் அதனைத் திமுக சட்டரீதியாகச் சந்திக்கும்.

“குற்றங்களை மறைக்கவே மடைமாற்று வழக்குகள்”:
- சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் இதுவரை நடைபெறாத போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமை போன்ற விசித்திரமான குற்றச்சம்பவங்கள் தற்போது அரங்கேறி வருகின்றன.
இரண்டரை வயதுக் குழந்தையைக் கூட காட்டுமிராண்டித்தனமாகப் பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூர நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதுபோன்ற சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை மறைக்கவும், மக்களை மடைமாற்றவுமே கைது செய்யப்பட்டவர்களைப் பார்க்கச் செல்பவர்கள் மீது கூட பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
“மக்களின் தீர்ப்பு விரைவில் வரும்”:
“சட்டத்தின் ஆட்சி நடந்த திமுக ஆட்சியில் கிடைத்த நியாயம், இந்த சைத்தான் ஆட்சியில் கிடைக்காது. மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். இதற்குத் தகுந்த தீர்ப்பை வெகு விரைவில் அளிக்கும் வகையில் மக்கள் மனநிலை மாறி வருகிறது” என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் பி.கே.சேகர்பாபு காட்டமாகக் கூறினார்.

