ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு வந்த இளைஞர்கள், பேருந்துகளின் ஜன்னல்களில் தொங்கியபடியும், கார்களின் கதவுகள் மற்றும் மேற்கூரைகளில் அமர்ந்தபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பசும்பொன்னில் தேவர் குருபூஜை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழா அக்டோபர் 30-ம் தேதி நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், மதன் ராஜா, ராஜுவ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
மேலும், தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காங்கிரஸ், பாஜக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் மரியாதை செலுத்தினர்.
பேருந்து, கார்களில் ஆபத்தான பயணம்
தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அரசு பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் பசும்பொன்னுக்கு வந்தனர்.

அப்போது சில இளைஞர்கள் அரசு பேருந்துகளின் ஜன்னல்களில் வெளியே தொங்கியபடியும், கார்களின் கதவுகள் மற்றும் மேற்கூரைகளில் அமர்ந்தபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இத்தகைய பயணம் விபத்து ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் வகையில் இருந்தது.
போலீசார் அறிவுரை
பேருந்துகள் மற்றும் கார்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்தவர்களை பார்த்திபனூர் சோதனைச் சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கினர். பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
குருபூஜை விழாவுக்கு வந்தவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வாகனங்களில் விதிமுறைகளைப் பின்பற்றி பயணம் செய்ய வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.
சைத்தான் ஆட்சியில் நியாயம் கிடைக்காது : முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு காட்டம்!
