Homeசெய்திகள்தமிழ்நாடுஆயிரக்கணக்கான கோயில் பணியாளர்களுக்கு சொற்ப ஊதியம் வழங்கப்படுவது மனசாட்சியை உலுக்குகிறது! – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆயிரக்கணக்கான கோயில் பணியாளர்களுக்கு சொற்ப ஊதியம் வழங்கப்படுவது மனசாட்சியை உலுக்குகிறது! – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

-

- Advertisement -

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நியாயமான மற்றும் கண்ணியமான ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.ஆயிரக்கணக்கான கோயில் பணியாளர்களுக்கு சொற்ப ஊதியம் வழங்கப்படுவது மனசாட்சியை உலுக்குகிறது! – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆயிரக்கணக்கான கோயில் பணியாளர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் வழங்கப்படுவது தங்களது மனசாட்சியை உலுக்குவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

மேலும், கோயில் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

ஊதியத்தை உயர்த்தக் கோரி வழக்கு

நெல்லையைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி. முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையின்போது, அறநிலையத்துறை அதிகாரிகள் அரசு ஊழியர்களாகக் கருதப்பட்டு அரசு ஊதிய முறையின் அடிப்படையில் ஊதியம் பெறுகின்றனர். ஆனால், கோயில் பணியாளர்களுக்குக் கோயில்களின் வருமானத்திலிருந்து ஊதியம் வழங்கப்படுகிறது.

இதனால், போதிய சொத்துகள் இல்லாத அல்லது வருமானம் குறைவாக உள்ள கோயில்களில் பணியாற்றும் ஊழியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தையே பெறும் நிலை இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

“ஊழியர்களின் ஊதியம் வாழ்வாதாரத்திற்கே போதவில்லை”

ஆயிரக்கணக்கான கோயில் பணியாளர்களுக்கு மிகக் குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவது தங்களது மனசாட்சியை உலுக்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியம், அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளைக்கூட நிறைவேற்றப் போதுமானதாக இல்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.

தேசிய அளவில் குறிப்பிடப்பட்டுள்ள நாளொன்றுக்கு ரூ.176 என்ற குறைந்தபட்ச ஊதிய அளவைக் காட்டிலும், தமிழகத்தின் பல கோயில்களில் பணியாற்றும் ஊழியர்கள் குறைவான ஊதியத்தைப் பெறுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது மட்டுமின்றி, கோயில் பணியாளர்கள் கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான நியாயமான ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

2021-ஆம் ஆண்டு உத்தரவு இன்னும் அமல்படுத்தப்படவில்லை

கோயில் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி ஊதியம் மற்றும் உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என 2021-ஆம் ஆண்டு நீதிபதி ஆர். மகாதேவன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவு இதுவரை முறையாக அமல்படுத்தப்படவில்லை என தற்போதைய விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்டது.

கோயில் பணியாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு அறநிலையத்துறை இதுவரை போதிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கோயில்களின் வருமானம் குறைவாக இருப்பதைக் காரணமாகக் கொண்டு அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்படும் நிலையைத் தொடர அனுமதிக்க முடியாது என்பதையும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

கோயில்களின் வருவாயைப் பெருக்க புதிய திட்டம்

கோயில் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்குவதற்கான நிதி ஆதாரங்களை உருவாக்குவது குறித்தும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். ஒவ்வொரு கோயிலுக்கும் நிதி திரட்டுவதற்கான ஆதரவுக் குழுக்களை அமைத்து, கோயில்களுக்குப் பொருத்தமான வருவாய் மாதிரிகளை உருவாக்கலாம் எனக் குறிப்பிட்டனர்.

இதற்காக இந்தியாவில் உள்ள தொழில்முனைவோர் மற்றும் சமூகத்தில் சாதனை படைத்தவர்களின் ஆதரவைப் பெறலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு உதாரணமாக, ஸோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவைக் குறிப்பிட்டனர். நீதிமன்ற ஊழியரின் மகனாக இருந்து தொழில்முனைவுத் துறையில் வெற்றிபெற்ற அவரது பயணம் ஊக்கமளிப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.

இத்தகைய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை உருவாக்கி, கோயில்களின் வருமானத்தைப் பெருக்குவதற்கான திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்றும், இந்த முயற்சிகளுக்கு ஆதரவைத் திரட்ட சமூக ஊடகங்களைப் பயனுள்ளதாகப் பயன்படுத்தலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கான முன்னெடுப்புகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர்.

இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுக் கோயில்களில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியருக்கும் கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான நியாயமான ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், கோயில் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்குவது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கில் உத்தரவு பிறப்பித்தனர்.

குட்கா முறைகேடு வழக்கை 3 மாதங்களில் எப்படி முடிக்க முடியும்? சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

MUST READ