Homeசெய்திகள்தமிழ்நாடுசாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

-

- Advertisement -

ஆய்வு வரம்புகளை முழுமையாக வெளியிட வேண்டும் – ஆணையம் பணியைத் தொடங்கும் முன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தல்!சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு தமிழகத்தில் சமூக நீதி ஆய்வு நடத்துவதற்காக ஆணையம் அமைக்கப்படும் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) வரவேற்பு தெரிவித்துள்ளது.

we-r-hiring

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் முடிவுக்கு வரவேற்பு!

மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறைவடைந்த பிறகு தமிழ்நாட்டில் சமூக நீதி ஆய்வு நடத்துவதற்கும், இதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய ஆணையம் அமைப்பதற்கும் தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் பாஜகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் தமிழக அமைச்சரவையின் இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

ஆய்வு வரம்புகளை வெளியிட வேண்டும்!

அதேநேரத்தில், இந்த ஆணையத்தின் ஆய்வு வரம்புகள் (Terms of Reference) உள்ளிட்ட முழுமையான விவரங்களை தமிழக அரசு பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.

சமூக நீதி ஆய்வின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமெனில், ஆணையம் தனது பணிகளைத் தொடங்குவதற்கு முன்பே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனைகளைப் பெறுவது அவசியம்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட கோரிக்கை!

அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் கேட்டறிவதன் மூலம் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை முழுமையாக வெளிக்கொண்டு வர முடியும்.

அதன் அடிப்படையில் சமூக மற்றும் பொருளாதார நீதியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழிவகுக்கும்.

எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் சமூக நீதி ஆய்வு தொடர்பாக ஆணையம் தனது பணியைத் தொடங்குவதற்கு முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“சட்டமன்றத்தில் பார்த்ததையே பேசினேன்”: அவதூறு புகார் குறித்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ விளக்கம்!

MUST READ