
கோவை மத்திய சிறை வளாகத்திலேயே வைத்து வழிப்பறி கைதி ஒருவர் காவல் துறையினரின் பிடியில் இருந்து மீண்டும் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த ராகவன்?

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் ராகவன் (25). இவர் மீது தமிழ்நாடு மற்றும் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் பல வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஜூன் மாதம் பெங்களூரில் பதிவான வழிப்பறி வழக்கு ஒன்ற தொடர்பாக, பெங்களூர் காவல்துறையினர் ராகவனை கோவையில் வைத்து கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது கருமத்தம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து காவல்துறையினரை ஏமாற்றிவிட்டு முதன்முறையாக தப்பிச் சென்றார். இச்சம்பவம் குறித்து அன்னூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
நுழைவு வாயிலில் நடந்த அசம்பாவிதம்:
இந்நிலையில், தலைமறைவாக இருந்த ராகவனை அன்னூர் காவல்துறையினர் நேற்று மீண்டும் அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தனர்.
சிறையின் முதல் பிரதான நுழைவு வாயிலைக் கடந்து, சிறைச்சாலைக்குள் செல்லும் முதன்மை வாயிலில் (Main Gate) வழக்கமான பாதுகாப்புச் சோதனைக்காகக் காத்திருந்தனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில், காவலர்களின் கவனத்தைத் திசைதிருப்பி ராகவன் திடீரென தப்பி ஓடினார்.
இரவு முழுவதும் தீவிரத் தேடுதல்:
கைதி தப்பிச் சென்றதைத் தொடர்ந்து, சிறை வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல்துறையினர் இரவு முழுவதும் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர் சிக்காததால், இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய ராகவனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை முடுக்கப்பட்டுள்ளது.

கேள்விக்குறியாகும் சிறைப் பாதுகாப்பு:
சமீபத்தில் தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி விலகுவதற்குள், கோவையின் மிக முக்கியப் பாதுகாப்பு மண்டலமான மத்திய சிறை வளாகத்திலேயே வைத்து கைதி ஒருவர் தப்பிச் சென்றிருப்பது, சிறைத்துறை நிர்வாகத்தின் பாதுகாப்பு முறைகள் குறித்து பொதுமக்களிடையே பெரும் கேள்விகளையும் அச்சத்தையும் எழுப்பியுள்ளது.
