தமிழகத்தில் சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மகளிர் அணி சார்பில் பிரம்மாண்டக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


சென்னை கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு தவெக அரசையும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
“தவறாக வாக்களித்து விட்டோமோ என மக்கள் அஞ்சுகின்றனர்!”
ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசுகையில், தமிழகத்தில் உள்ள பெண்கள் ஒவ்வொரு நாளும் “ஐயோ! தவறாக வாக்களித்து விட்டோமோ” என்று நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தேர்தல் பரப்புரையில் “இது நாடா… காடா…” என்று கேட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், கடந்த திமுக ஆட்சியில் நிலவிய அமைதியையும் வளர்ச்சியையும் மக்கள் மாற்ற விரும்பினார்களா எனத் தெரியவில்லை என்றும், தற்போதைய தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
திரைப்படத்தில் வில்லனை மேம்பாலத்தின் கீழ் கட்டித் தொங்கவிடும் காட்சிகளைப் பார்த்து ஏமாந்த மக்களுக்கு, தற்போது தவெக நிர்வாகிகள் செய்த குற்றப் பட்டியலைப் பார்த்தால் அவர்களையே கட்டித் தொங்கவிட வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளதாக விமர்சித்தார்.
குற்றம் செய்பவர்கள் அடைக்கலம் புகும் இடமாகத் தமிழக வெற்றிக் கழகம் மாறியுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், போதையில்லாத் தமிழகம் என்று பேசிய விஜய்யின் கட்சி நிர்வாகி ஒருவரிடமிருந்து 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“50 கைதிகள் தப்பியோடிய விபரீதம்: காவல்துறை என்ன செய்கிறது?”
சேலம், அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆர்.கே. நகர், திருச்செந்தூர் உள்ளிட்ட பல இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் தவெக நிர்வாகிகளே ஈடுபட்டுள்ளதாக கனிமொழி குற்றம்சாட்டினார்.
தவெக ஆட்சியில் இதுவரை 700 கொலைகளும், பெண்களுக்கு எதிராக 400-க்கும் மேற்பட்ட கொடுமைகளும் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் செல்வது கூடத் தெரியாமல் அரசு செயல்படுவதாக விமர்சித்தார்.
இதுவரை 50-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளதாகக் குற்றம்சாட்டிய கனிமொழி, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை சட்டம் ஒழுங்கைப் பராமரிக்காமல் திமுக நிர்வாகிகளைக் கண்காணிப்பதிலேயே தீவிரமாகச் செயல்படுவதாகக் கூறினார்.
மேடையில் ‘பெப்பர் ஸ்பிரே’யைக் காட்டி ஆவேசம்!
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைச் சுட்டிக்காட்டிப் பேசிய கனிமொழி, அரிசி, பருப்பு விலைகள் இரண்டு மடங்காக உயர்ந்துவிட்டதாகவும், தீபாவளி மட்டுமல்லாமல் சாதாரண நாட்களிலும் வீட்டில் சமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
‘நண்பா, நன்பீஸ்’ என்று கேட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டதாக விமர்சித்த அவர், தாய்மாமன் சீர், அண்ணன் சீர் என்று நாடகமாடுவதை விடக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதே முக்கியம் எனக் குறிப்பிட்டார்.
“பெண்களுக்கு உங்களால் பாதுகாப்பு தர முடியாவிட்டால், அண்ணன் சீராக ஒவ்வொரு பெண்ணுக்கும் ரேஷன் கடைகள் மூலமாக ‘பெப்பர் ஸ்பிரே’ வழங்குங்கள்” என்று மேடையில் பெப்பர் ஸ்பிரேயைக் கையில் எடுத்துக் காட்டி ஆவேசமாகக் கோரிக்கை விடுத்தார்.
“தவெக அரசை வீட்டிற்கு அனுப்பினால்தான் தமிழகத்தைப் பாதுகாக்க முடியும்!”
இந்த அரசு தொடர்ந்து நீடித்தால் தமிழ்நாடு இருண்ட மாநிலமாக மாறிவிடும் என்றும், தொழில் முதலீடுகளோ நிர்வாகச் செயல்பாடோ இல்லாத தவெக அரசை உடனடியாக வீட்டிற்கு அனுப்பினால்தான் தமிழகத்தைப் பாதுகாக்க முடியும் என்றும் கனிமொழி எம்.பி. தனது உரையை நிறைவு செய்தார்.
இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுக மகளிர் தொண்டர்கள் பங்கேற்று அரசுக்கு எதிராகப் பலத்த கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
