தமிழகத்தில் சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை, விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக மகளிர் அணி சார்பில் இன்று (அக்டோபர் 31) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசைக் கண்டித்து நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான திமுக மகளிர் அணியினர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
புதுக்கோட்டை: கும்மியடித்து, நாடகம் நடத்தி வித்தியாசமான போராட்டம்!
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைச் சுட்டிக்காட்டும் வகையில் அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றை நடுவில் வைத்து பெண்கள் கருப்புத் துணியைத் தலையில் அணிந்து கும்மியடித்துப் பாடல்கள் பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தவெக அரசு புதிய திட்டங்கள் எதையும் கொண்டுவராமல், முந்தைய திமுக அரசின் சாதனைகளுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டி மக்களைத் திசைதிருப்புவதாகக் குற்றம்சாட்டி, அதனை நாடகமாக நடித்துக் காட்டி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இப்போராட்டத்தில் திருமயம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி, ஆலங்குடி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை எம்.எல்.ஏ., முத்துராஜா மற்றும் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்ல பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம்: சென்னை மேயர் பிரியா ராஜன் பங்கேற்பு – 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்!
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராகச் சென்னை மேயர் பிரியா ராஜன் கலந்துகொண்டு, தவெக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு எதிராகக் கண்டன உரையாற்றினார்.
இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராகக் கடுமையான முழக்கங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார்.
நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை, தொடரும் கொலைகள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் மௌனம் காப்பதாகக் குற்றம்சாட்டி தவெக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணி போராட்டம்!
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஆகியவற்றை முன்வைத்து தமிழகம் முழுவதும் ஒரே நாளில் திமுக மகளிர் அணி நடத்திய இந்தக் கண்டனப் போராட்டங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
