சிதம்பரம் நடராஜர் கோயிலைப் பொது தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்கவில்லை எனக் கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நிர்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பொது தீட்சிதர்கள் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அதேநேரத்தில், அரசின் உத்தரவுக்கு ஆதரவாகவும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, கடந்த 2014-ஆம் ஆண்டு கோயில் நிர்வாகம் பொது தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, கோயில் முறையாக நிர்வகிக்கப்படவில்லை என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.
ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நிர்வாகக் குழு
கோயில் நிர்வாகத்தைக் கண்காணிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோரை முறையே நிர்வாகக் குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவராக நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் உறுப்பினராகவும், பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைச் செயலாளர் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனுமதியற்ற கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை
கோயிலுக்குள் பொது தீட்சிதர்கள் மேற்கொண்ட தொடர் கட்டுமானப் பணிகளால் புராதனக் கட்டிடங்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, கோயிலின் பழமையான கட்டிடங்களுக்கு இடையூறாகவும், உரிய அனுமதியின்றியும் கட்டப்பட்டுள்ள தேவையற்ற கட்டிடங்களை அகற்றுவது தொடர்பாகத் தமிழ்நாடு புராதனச் சின்னங்கள் ஆணையத்துடன் கலந்தாலோசித்து நிர்வாகக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்க உத்தரவு
கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துகளை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை முழுமையாகக் கணக்கெடுத்து, மாயமான மதிப்புமிக்க பொருள்களை மீட்கவும், சொத்துகளுக்கான வாடகை மற்றும் குத்தகை பாக்கிகளை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
கோயிலின் வரவு, செலவுகளுக்கான முறையான கணக்குகளைப் பராமரிப்பதுடன், வருமானத்தைப் பெருக்க நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நிர்வாகக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளாக வருமானக் கணக்கு சமர்ப்பிக்கவில்லை!
கடந்த 12 ஆண்டுகளாகக் கோயிலுக்கு வந்த வருமானம் குறித்த முழுமையான கணக்குகளைப் பொது தீட்சிதர்கள் சமர்ப்பிக்கவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். கோயிலைப் பொது தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்காதது வேதனை அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
குடமுழுக்கு மற்றும் பக்தர்களின் வழிபாட்டு உரிமை
கோயிலின் புராதனக் கட்டிடங்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படுத்தாமல் திருப்பணிகளை மேற்கொண்டு, மதச் சடங்குகள் மற்றும் மரபுகளின்படி குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், கோயிலின் கனகசபையில் நின்று அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யவும், தேவாரம், திருவாசகம் பாடவும் சம வாய்ப்பு வழங்கப்படுவதை நிர்வாகக் குழு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
கோயிலின் பழமையான பெருமையை மீட்டெடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வாகக் குழு விரைவில் மேற்கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், குழுவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசுத் துறை அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
