HomeBreaking Newsஅன்பில் மகேஸை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரிய மனு: நவம்பர் 2-ல் உத்தரவு...

அன்பில் மகேஸை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரிய மனு: நவம்பர் 2-ல் உத்தரவு – சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!

-

- Advertisement -

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதில் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனு மீதான உத்தரவை நவம்பர் 2-ம் தேதி பிறப்பிப்பதாக சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அன்பில் மகேஸை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரிய மனு: நவம்பர் 2-ல் உத்தரவு – சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதற்காகக் கோடிக்கணக்கில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

we-r-hiring

இதற்கிடையே, ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவுக்கு நவம்பர் 2-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 நாள் போலீஸ் காவல் கோரி மனு!
இந்த வழக்கில் சுமார் ரூ.400 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாகக் கூறும் காவல்துறையினர், அன்பில் மகேஸை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஏற்கெனவே முழு ஒத்துழைப்பு அளித்துள்ளோம் – அன்பில் தரப்பு!
அன்பில் மகேஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி வாதிட்டார். அப்போது, உரிய உணவு வழங்கப்படாததால் அன்பில் மகேஸின் உடல் எடை 2 முதல் 4 கிலோ வரை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கைது செய்யப்படுவதற்கு முன்பே அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர் என்றும், செப்டம்பர் 16-ம் தேதி அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, செப்டம்பர் 18-ம் தேதி சுமார் 8 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

அந்த விசாரணைக்கு அன்பில் மகேஸ் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், காவல்துறைக்குத் தேவையான ஆவணங்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். ஏற்கெனவே 200-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு, அவற்றுக்கு பதிலளித்துள்ள நிலையில், மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாதிட்டார்.

20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் புதுப்பிக்கும் முடிவு!
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான கூட்டத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றதாக அன்பில் மகேஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை அங்கீகாரத்தைப் புதுப்பிக்கும் நடைமுறையை மாற்றி, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பள்ளிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், அந்தக் கோரிக்கையை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்ல அமைச்சர் உத்தரவிட்டதாகவும் வழக்கறிஞர் கூறினார்.

பல துறைகளின் ஆலோசனைக்குப் பிறகே 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரத்தைப் புதுப்பிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டதாகவும் விளக்கினார்.

இந்த முடிவை தற்போது ஊழல் நடவடிக்கையாகக் குறிப்பிடுவதாகக் கூறிய அவர், அங்கீகாரப் புதுப்பிப்பு நடைமுறையை மாற்றக் கோரியவர்களே தற்போது வழக்கில் சாட்சிகளாக இருப்பதாகவும் வாதிட்டார்.

மேலும், லஞ்சம் கேட்டதாகவோ, பணம் பெற்றதாகவோ தங்களுக்கு எதிராக என்ன ஆதாரம் உள்ளது என்றும், பலருடன் இணைந்து எடுக்கப்பட்ட முடிவில் தன் மீது மட்டும் வழக்குத் தொடரப்படுவது ஏன் என்றும் அன்பில் மகேஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அரசியல் காரணங்களால் கைது – வழக்கறிஞர் வாதம்!
அரசியல் காரணங்களுக்காகவே தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அன்பில் மகேஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊடகங்களில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறுவது போன்ற சூழல் உருவாகியுள்ளதாகவும், நியாயமான மற்றும் சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

சோதனைக்கு வந்த காவல்துறையினரை யாரும் தடுக்கவில்லை என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார். காவல் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது என்றும், ஜாமீன் வழங்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் போலீஸ் காவல் மனுவைப் பயன்படுத்தக் கூடாது என்றும் வாதிட்டார்.

அன்பில் மகேஸுக்கு நீதிமன்றம் குறிப்பிட்ட உணவு வழங்கப்படவில்லை என்றும், அவர் தூங்கும்போதும் அறையில் விளக்குகள் எரியவிடப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. வீட்டு உணவு மற்றும் மருந்துகளை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும், போலீஸ் காவல் வழங்கப்பட்டால் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

வீட்டு உணவு கோரிக்கை குறித்து காவல்துறை பதில்!
காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உஷா ராணி ஆஜரானார். அன்பில் மகேஸுக்கு சிறையில் உரிய மருத்துவ வசதிகள் செய்து தரப்படும் என அவர் தெரிவித்தார். வீட்டு உணவு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டியிருப்பதால், அதுகுறித்து பதிலளிக்க அவகாசம் கோரினார்.

இதற்கு அன்பில் மகேஸ் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். வீட்டு உணவு வழங்குவது தொடர்பாகக் கூட அவகாசம் கோருவது ஏன் என்றும், இதன் மூலம் காவல்துறையின் நோக்கம் என்ன என்பது தெளிவாவதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தனர்.

தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆஜராகி, வீட்டு உணவு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதங்களை முன்வைத்தார்.

நவம்பர் 2-ம் தேதி உத்தரவு!
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, அன்பில் மகேஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விசாரணை அதிகாரி செந்திலிடம் விளக்கம் கேட்டார்.

இதையடுத்து, அன்பில் மகேஸை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கக் கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை நவம்பர் 2-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். இதனால், அன்பில் மகேஸின் போலீஸ் காவல் தொடர்பான முடிவு திங்கட்கிழமை வெளியாக உள்ளது.

MUST READ