
தேசிய அனுமதி (National Permit) பெற்ற லாரி ஓட்டுநர்கள் மற்றும் உணவகங்களில் சந்தேக நபர்களின் புகைப்படங்களைக் காட்டி விசாரணை முடுக்கியமைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி பகுதியில், கடந்த 12-ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி திடீரெனக் காணாமல் போனார். சிறுமி காணாமல் போய் இன்றோடு 23 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அவர் குறித்து இதுவரை எந்தவிதமான உறுதியான தடயமும் தகவலும் கிடைக்காதது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையிடமிருந்து சிபிசிஐடி-க்கு மாற்றம்
இச்சம்பவம் குறித்து ஆரம்பத்தில் விழுப்புரம் மாவட்டக் காவல்துறை 10 நாட்கள் தீவிர விசாரணை நடத்தியது. இருப்பினும், வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், கடந்த 21-ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 22-ஆம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 13 நாட்களாகச் சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

35-க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை
சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார், சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் என 35-க்கும் மேற்பட்டோரிடம் ஏற்கனவே தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனிடையே, சரித்திரப் பதிவேடு குற்றவாளியான (History Sheeter) ராஜதுரையிடம் தொடர்பில் இருந்த அரவிந்த் என்ற ஆடு மேய்க்கும் இளைஞரை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
தேசிய அனுமதி லாரி ஓட்டுநர்களிடம் விசாரணை!
வழக்கை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக சந்தேக நபர்களின் புகைப்படங்களைத் அப்பகுதியில் உள்ள டீக்கடைகள் மற்றும் உணவகங்களில் பணிபுரிபவர்களிடம் காண்பித்து சிபிசிஐடி போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர்.
ஆலம்பூண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நடுப்பட்டு, ரெட்டிபாளையம், திக்காமேடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 13 நேஷனல் பெர்மிட் (National Permit) லாரி ஓட்டுநர்களின் விவரங்களைச் சேகரித்து, அவர்களிடமும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காகச் அனைத்துக் கோணங்களிலும் சிபிசிஐடி போலீசார் சோதனையையும் விசாரணையையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
