ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் ஆவின் நிறுவனம் கேட்டுக் கொண்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தின் இழப்பைக் குறைத்து, அதை லாபத்தில் இயக்குவதற்காக விலை உயர்வை மட்டுமே தீர்வாக முன்வைப்பது ஏழை மக்களின் நலனுக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் அண்மையில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலின் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது. ஏற்கனவே இழப்பைச் சந்தித்து வரும் ஆவின் நிறுவனத்திற்கு, கொள்முதல் விலை உயர்வால் மேலும் நிதிச்சுமை ஏற்படும் என்றும், இதைச் சமாளிக்க விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டால், அடுத்த சில நாட்களில் ஆவின் பால் விலை உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆவின் நிறுவனம் 2025-26ஆம் ஆண்டில் ரூ.89.80 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. பால் கொள்முதல் விலை உயர்வால் இந்த இழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அனைத்து இழப்புகளுக்கும் விலை உயர்வு மட்டுமே தீர்வாக இருக்க முடியாது. ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஏழை மக்களுக்கான சேவை என்ற அடிப்படையிலேயே மதிப்பிட வேண்டும்; லாப நோக்கத்தை மட்டுமே அளவுகோலாகக் கொள்ளக் கூடாது என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தனியார் பாலை விட ஆவின் விலை குறைவு
தமிழ்நாட்டில் ஆவின் பாலை விட தனியார் நிறுவனங்களின் பால் விலைகள் 68 சதவீதம் வரை அதிகமாக இருப்பதாக அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார்.
3 சதவீத கொழுப்புச் சத்துள்ள ஆவின் நீல உறை பால் லிட்டருக்கு ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே வகை பாலை தனியார் நிறுவனங்கள் ரூ.24 கூடுதலாக விற்பனை செய்கின்றன. அதேபோல், ஆவின் பச்சை உறை பால் ரூ.44-க்கு விற்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்களில் அதன் விலை ரூ.74 ஆக உள்ளது. 6 சதவீத கொழுப்புச் சத்துள்ள ஆவின் ஆரஞ்சு உறை பால் லிட்டருக்கு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே வகை பாலை தனியார் நிறுவனங்கள் ரூ.84-க்கு விற்பனை செய்கின்றன.
தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஆவின் பால் விலை குறைவாக இருப்பதால், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அது பெரும் உதவியாக உள்ளது. இந்நிலையில், லிட்டருக்கு ரூ.5 விலை உயர்த்தப்பட்டால் அது அதிகபட்சமாக 12.5 சதவீத உயர்வாக இருக்கும். ஏற்கனவே அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள சூழலில், பால் விலையும் உயர்ந்தால் சாதாரண மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
நிர்வாகச் சீர்திருத்தம் மூலம் இழப்பைக் குறைக்கலாம்
ஆவின் நிறுவனம் தொடர்ந்து இழப்பில் இயங்கினால் அதன் செயல்பாடுகள் முடங்கிவிடாதா என்ற கேள்வி எழலாம். ஆனால், மக்களுக்கு மலிவு விலையில் பால் வழங்கியபடியே நிறுவனத்தை லாபத்தில் இயக்குவதற்கு வழிகள் உள்ளன என அன்புமணி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டில் ஆவின் மாநில அலகு ரூ.120 கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாகவும், மொத்தமுள்ள 27 மாவட்ட அலகுகளில் 7 அலகுகள் ரூ.23 கோடி இழப்பை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், மீதமுள்ள 20 மாவட்ட அலகுகள் ரூ.53.20 கோடி லாபம் ஈட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் போலவே ஆவின் நிர்வாகத்திலும் ஊழல் மற்றும் நிர்வாகத் திறனின்மை இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், அவற்றைச் சரிசெய்வதன் மூலம் அனைத்து மாவட்ட அலகுகளையும் லாபத்தில் இயங்கச் செய்ய முடியும் என்றும், மாநில அலகின் இழப்பையும் பெருமளவில் குறைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். பால் விற்பனையில் ஏற்படும் இழப்பை தமிழக அரசே ஏற்றுக்கொண்டு மானியம் வழங்குவதன் மூலம் ஆவின் நிறுவனத்தை லாபத்தில் இயக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆவினுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும்
விவசாய மின் இணைப்புகளுக்கு முழுமையாகவும், வீடுகளுக்கு 100 முதல் 200 யூனிட் வரையிலும் இலவச மின்சாரம் வழங்கப்படுவதால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, கடந்த ஆண்டில் மட்டும் தமிழக அரசு ரூ.33,478 கோடி மானியம் வழங்கியுள்ளதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.17,000 கோடி மானியம் வழங்கப்படுவதாகவும், வெற்றிப் பயணத் திட்டம் நடைமுறையில் இருப்பதால் நடப்பாண்டில் இந்த மானியம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவை மக்களின் அடிப்படைத் தேவைகள் என்பதால் அவற்றுக்கு அரசு மானியம் வழங்குவதைப் போலவே, அதைவிட முக்கியமான அடிப்படைத் தேவையான பாலுக்கும் மானியம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த வேண்டும் என்ற நிறுவனத்தின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்கக் கூடாது என்றும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆவின் நிறுவனத்திற்கு உரிய மானியம் வழங்கி அதன் நிதிநிலையைச் சீரமைக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
