
டாஸ்மாக் கடைகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பார் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, பழங்குடியினர் மற்றும் மலைப்பகுதிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்த பார்கள் (Bars) அமைப்பது மற்றும் செயல்படுத்துவது தொடர்பான விதிகளில் முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டு தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிக்கையை (Gazette Notification) வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், 2003-ல் (Tamil Nadu Liquor Retail Vending Rules, 2003) பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள்:
100 மீட்டர் சுற்றளவுக்குள் பார் அமைக்கலாம்:இதுவரை மதுக்கடை அமைந்திருக்கும் வளாகத்தின் உள்ளேயோ அல்லது அதனை ஒட்டியோ மட்டுமே பார்கள் அமைக்க அனுமதி இருந்தது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தின் படி, மதுக்கடையை ஒட்டிய பகுதியிலோ அல்லது கடையிலிருந்து 100 மீட்டருக்குள் அமைந்துள்ள பொருத்தமான இடத்திலோ பார் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வணிகப் பகுதிகளுக்கு விலக்கு: வளர்ச்சி அல்லது நகரத் திட்டமிடல் அதிகார அமைப்புகளால் (Town Planning Authorities) ‘வணிகப் பகுதி’ (Commercial Zone) அல்லது ‘தொழிற்பகுதி’ (Industrial Zone) என வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில், இந்த தூரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் விலக்கு அளிக்கப்படுகிறது.

பழங்குடியினர் & மலைப்பகுதிகளுக்குத் தடை: ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் (Integrated Tribal Development Programme) மற்றும் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டப் பகுதிகளில் (Hill Area Development Programme) பார்கள் அமைப்பதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுவா் மறைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டாயம்:
பார்களுக்குள் அமர்ந்து மதுபானம் அருந்துவது வெளியிலிருந்தோ அல்லது மது விற்பனை செய்யும் கடையிலிருந்தோ தெரியாத வகையில் மறைப்புத் தடுப்புகள் (Screens) கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும்.
பார்களில் போதுமான குடிநீர் வசதி மற்றும் கை கழுவும் வசதிகள் (Washbasin) கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், பகுதியைச் சுத்தமாகப் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பார்களின் குறைந்தபட்ச தளப்பரப்பு (Plinth Area) 15 சதுர மீட்டரிலிருந்து 20 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.
21 வயது வரம்பு மற்றும் பணியாளர் கட்டுப்பாடு:
21 வயதுக்குட்பட்ட நபர்களை பாருக்குள் அனுமதிக்கக் கூடாது.
அதேபோல 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை பார்களில் எவ்விதப் பணிகளிலும் அமர்த்தக் கூடாது என்பதும் விதிகளில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பார் உரிமங்களுக்கான டெண்டர் நடைமுறைகளில் கூடுதல் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கவும், வணிக ரீதியிலான நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தவும் இந்த விதிகள் திருத்தப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

