
தமிழகத்தில் அமைய வேண்டிய ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்கு கைமாறியது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள பாஜக, தமிழக அரசு வெட்கப்பட வேண்டுமென விமர்சித்துள்ளது.
சென்னை: ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் தென் கொரிய விநியோகஸ்தர் நிறுவனங்களான ஹ்வாஷின் (Hwashin), சியோயான் (Seoyon) மற்றும் இவாமெட் (Ywamet) ஆகிய 3 முன்னணி நிறுவனங்கள், தமிழகத்தில் தொடங்க வேண்டிய தொழிற்சாலைகளை ஆந்திர மாநிலத்தில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ள சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் இந்நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகளை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன. ஆனால், தற்போது இந்த மூன்று நிறுவனங்களும் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் ரூ.1,614 கோடி மதிப்பிலான தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்காக ஆந்திர அரசுடன் அதிகாரப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 1,418 புதிய வேலைவாய்ப்புகள் ஆந்திராவில் உருவாகவுள்ளன.
ஆந்திர அரசின் தீவிர நடவடிக்கை: கடந்த ஜூலை 2026-ல் தென் கொரியாவின் சியோல் நகரில் ஆந்திர தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், ஹூண்டாய்-கியா விநியோகச் சங்கிலி நிறுவனங்களுடன் வட்டமேசை மாநாட்டை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச பொருளாதார மேம்பாட்டு வாரியம் (APEDB) மேற்கொண்ட அதிவிரைவு மற்றும் தீவிரத் தொடர் நடவடிக்கைகளின் காரணமாகவே இம்மாபெரும் முதலீடுகள் ஆந்திராவிற்குச் சென்றுள்ளன.

பதிலளிக்காத ‘கைடன்ஸ்’ அமைப்பு: அதேவேளையில், இந்நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதிலிருந்து பின்வாங்கியதற்கான காரணம் குறித்துத் தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான ‘கைடன்ஸ்’ (Guidance Tamil Nadu) எந்தப் பதிலும் அளிக்காமல் அமைதி காத்து வருகிறது.
பாஜக சுட்டிக்காட்டி கண்டனம்: இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமைச் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“ஆந்திர அரசின் விரைவான மற்றும் உயர் மட்டத் தொடர்புகள் காரணமாக, தமிழகத்திற்கு மிகச் சுலபமாகக் கிடைத்திருக்க வேண்டிய முதலீடுகளையும் வேலைவாய்ப்புகளையும் நம் மாநிலம் இழந்துள்ளது.
ஏற்கனவே இந்த நிறுவனங்களின் தொடர்புடைய அலகுகள் தமிழகத்தில் இயங்கி வரும் நிலையிலும், கைக்கெட்டிய வாய்ப்பை நழுவவிட்டு ஆந்திராவிடம் பறிகொடுத்திருப்பதை தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொடர்புடைய நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற நிலையிலும், கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு ஆந்திராவிடம் பறிகொடுத்ததற்கு த வெ க அரசு வெட்கப்பட வேண்டும்..” இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
