பிரதமர் நரேந்திர மோடியிடம் செய்தியாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பிய நார்வே நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஹெலே லிங்கின் (Helle Lyng) இந்திய விசா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற உள்ள ‘பாரத் உச்சி மாநாட்டில்’ பங்கேற்பதற்காக இந்தியா வரத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்தச் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


யார் இந்த ஹெலே லிங்?
நார்வே தலைநகர் ஒஸ்லோவைச் சேர்ந்த ‘டாக்ஸாவிசன்’ (Dagsavisen) நாளிதழில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர் ஹெலே லிங், இந்தியாவில் நடைபெறும் பாரத் உச்சி மாநாட்டில் ஊடகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் தொடர்பான அமர்வில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தார்.
நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், ‘ஊடகத்தின் எதிர்காலம்’ என்ற தலைப்பிலான விவாதத்தில் அவர் பேசுவதாக இருந்தது.
பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியதால் சர்ச்சை?
கடந்த மே மாதம் நார்வே சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஹெலே லிங், “உலகின் மிகவும் சுதந்திரமான ஊடகங்களிலிருந்து வரும் கேள்விகளுக்கு பிரதமர் ஏன் பதிலளிப்பதில்லை?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்வி தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பாகவும் அவர் விமர்சனங்களை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
விமான நிலையம் புறப்படுவதற்கு முன்பு விசா ரத்து?
இந்தியாவுக்கு வருவதற்கான விசா மற்றும் அரசியல் ரீதியான அனுமதி கிடைத்திருந்ததாகக் கூறும் ஹெலே லிங், நவம்பர் 11ஆம் தேதி விமான நிலையத்துக்குப் புறப்படத் தயாரானபோது இந்தியத் தூதரகத்திலிருந்து அழைப்பு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அப்போது, இந்தியாவுக்குப் பயணம் செய்ய முடியாது என்றும், அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பயணத்துக்கு சுமார் 10 நிமிடங்களுக்கு முன்புதான் இந்தத் தகவல் கிடைத்ததாகவும் அவர் தனது காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
அமித் ஷாவுக்கு நேரடியாகக் கேள்வி
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நோக்கி கேள்வி எழுப்பியுள்ள ஹெலே லிங், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரிலேயே தனது விசா ரத்து செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியதும், இந்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்ததும் இந்த நடவடிக்கைக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தான் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதானி, அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் குறித்த தனது விமர்சனங்களும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், விசா ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் விளக்கமும் இந்தச் செய்தி வெளியாகும் நேரம் வரை கிடைக்கவில்லை.
பாரத் உச்சி மாநாட்டில் பங்கேற்க முடியுமா?
காங்கிரஸ் கட்சி ஏற்பாட்டில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள பாரத் உச்சி மாநாட்டில், 70-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது நிகழ்ச்சி நடைபெற இன்னும் கால அவகாசம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஹெலே லிங், இந்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு பத்திரிகையாளர் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய பின்னணியில் விசா ரத்து செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்க மீண்டும் முயற்சி – காற்று மாசுபாட்டைக் குறைக்க புதிய திட்டம்!
