தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (நவம்பர் 13) அதிகாலை 5.30 மணியளவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், நவம்பர் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வடமேற்கு திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
அதன்படி, இன்று அதிகாலை 5.30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 14ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், நவம்பர் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மற்றும் நாளை மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?
சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை!
காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் பகுதிகளில் நிலவும் வானிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மீனவர்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
‘அக்வான்’ புயலாக மாறுமா?
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று புயலாக மாறினால், அதற்கு ஈரான் பரிந்துரைத்துள்ள ‘அக்வான்’ என்ற பெயர் சூட்டப்படும்.
இருப்பினும், தற்போதைய நிலையில் இது புயலாக மாறுவது உறுதி செய்யப்படவில்லை. காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் நகர்வு மற்றும் வலிமை குறித்து வானிலை ஆய்வு மையத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
