Homeசெய்திகள்இந்தியா“என்னுடன் நேருக்கு நேர் விவாதித்தால் மோடி பிரதமராக நீடிக்க மாட்டார்” – ராகுல் காந்தி மீண்டும்...

“என்னுடன் நேருக்கு நேர் விவாதித்தால் மோடி பிரதமராக நீடிக்க மாட்டார்” – ராகுல் காந்தி மீண்டும் சவால்!

-

- Advertisement -

பிரதமர் நரேந்திர மோடியுடன் நேருக்கு நேர் பொது விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாகவும், அந்த விவாதத்திற்குப் பிறகு மோடி பிரதமராக நீடிக்க மாட்டார் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி, பிரதமர் மோடியுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு ஏற்கனவே பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடைபெற்ற ‘என்னிடம் கேளுங்கள்’ (Ask Me) நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மீண்டும் தனது சவாலை முன்வைத்துள்ளார்.

மக்களவையில் பேச அனுமதிப்பதில்லை – ராகுல் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், தனியாக நேருக்கு நேர் விவாதம் நடத்த வேண்டும் என்று ஏன் வலியுறுத்துகிறீர்கள் என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், மக்களவையில் தன்னைப் பேச அனுமதிப்பதில்லை என்றும், தனது மைக்கை அணைத்துவிடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

விவசாயச் சட்டங்கள், வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR), சீன விவகாரம், முன்னாள் ராணுவத் தளபதி நரவானேவின் புத்தகம் மற்றும் எப்ஸ்டீன் தொடர்பான விவகாரங்கள் குறித்து பேச அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அதானி, மோகன் பகவத் நடுவராக இருந்தாலும் சம்மதம்

மேலும், நீண்ட உரைகள் இல்லாமல் இரு தலைவர்களும் நேரடியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் வகையில் விவாதம் நடைபெற வேண்டும் என்று ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்திற்கு அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி அல்லது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோரில் யாராவது நடுவராக நியமிக்கப்பட்டாலும் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

“என்னுடன் நேருக்கு நேர் விவாதித்த பிறகு பிரதமர் மோடி பிரதமராக நீடிக்க மாட்டார் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விவாதிக்க பாஜக வலியுறுத்தல்

ராகுல் காந்தியின் சவாலை பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்கனவே இருக்கும்போது, தனியாக விவாதம் நடத்த வேண்டும் எனக் கேட்பது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், நாடாளுமன்றமே விவாதத்திற்கான உரிய இடம் என்றும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புடன் ராகுல் காந்தி செயல்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியுடனான நேருக்கு நேர் விவாதத்திற்கான தனது அழைப்பை ராகுல் காந்தி மீண்டும் முன்வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இந்தியாவின் முயற்சிகளால் உலகம் முழுவதும் பிரபலமான யோகா! – பிரதமர் மோடி பெருமிதம்

MUST READ