தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக, வரும் நவம்பர் 23-ம் தேதி சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நோக்கில், தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால், அரசியலமைப்புத் திருத்த மசோதா என்பதால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்பட்டது.
கடந்த முறை தோல்வியடைந்த மசோதா!
அப்போது மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 528 உறுப்பினர்கள் பங்கேற்றனர். மசோதா நிறைவேற 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், ஆதரவாக 298 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதனால் தேவையான பெரும்பான்மை கிடைக்காமல் மசோதா தோல்வியடைந்தது.
மாறிய அரசியல் சூழல் – மீண்டும் முயற்சி!
தற்போது அரசியல் சூழ்நிலைகள் மாறியுள்ளதால், மசோதாவுக்கு ஆதரவான வாக்குகள் அதிகரிக்கும் என ஆளுங்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், சில கட்சிகள் வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்யக்கூடும் என்றும், இதன் மூலம் மசோதா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மசோதா 15 முதல் 18 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என ஆளுங்கட்சி தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நவம்பர் 23-ல் சிறப்புக் கூட்டத்தொடர்?
இதற்காக வரும் நவம்பர் 20-ம் தேதிக்குப் பிறகு, குறிப்பாக நவம்பர் 23-ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பான முன்னறிவிப்புக்கு 14 நாட்கள் தேவைப்படும். ஆனால், ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தொடரின் தொடர்ச்சியாகச் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படுவதால், 3 நாட்களுக்கு முன்னதாக அறிவித்தால் போதுமானது எனக் கூறப்படுகிறது.
850 ஆக உயருமா மக்களவைத் தொகுதிகள்?
தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டால், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 850 வரை உயர்த்த வழிவகை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
குறிப்பாக, 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலேயே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
தொகுதி மறுவரையறை தொடர்பாகத் தென் மாநிலங்கள் நீண்டகாலமாகக் கவலை தெரிவித்து வருகின்றன. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்பதே அவற்றின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு தரப்பு, தற்போதுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைவிட 50 சதவீதம் அதிகரிக்கவே திட்டமிடப்படுவதாகவும், தென் மாநிலங்களின் தொகுதிகள் குறைய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.
1971-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையிலான தொகுதி விகிதாச்சாரத்தை மாற்றமின்றித் தொடரவும் புதிய மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மீண்டும் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், குறிப்பாகத் தென் மாநில அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
“என்னுடன் நேருக்கு நேர் விவாதித்தால் மோடி பிரதமராக நீடிக்க மாட்டார்” – ராகுல் காந்தி மீண்டும் சவால்!
