Homeசெய்திகள்இந்தியா“எனது தொலைபேசியை பிரதமர் மோடி ஒட்டுக்கேட்கிறார்!” – ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு!

“எனது தொலைபேசியை பிரதமர் மோடி ஒட்டுக்கேட்கிறார்!” – ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு!

-

- Advertisement -

தனது தொலைபேசி உரையாடல்களை பிரதமர் நரேந்திர மோடி ஒட்டுக்கேட்டு வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் பொது விவாதம் நடத்தத் தயார் என்றும் அவர் மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் நடைபெற்ற ‘என்னிடம் கேளுங்கள்’ (Ask Me) என்ற ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்று, பயனர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது, பிரதமர் மோடியுடன் நேரடி விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தனது தொலைபேசியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு

தனது தொலைபேசியையும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் தொலைபேசிகளையும் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் மத்திய அமைப்புகள் கண்காணித்து வருவதாக ராகுல் காந்தி ஏற்கனவே குற்றம்சாட்டி வந்தார்.

தற்போதைய ஆன்லைன் கலந்துரையாடலிலும் இதே குற்றச்சாட்டை முன்வைத்த அவர், “எனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இந்தத் தொலைபேசியில்தான் உள்ளன. பிரதமருக்கு இது தெரியும்; ஏனென்றால் அவர்தான் எனது தொலைபேசியை ஒட்டுக்கேட்கிறார்” என்று தெரிவித்தார்.

மேலும், யார் வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள், யார் தேசவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து பிரதமர் மோடியுடன் நேரடி விவாதம் நடத்தினால் உண்மை வெளிவரும் என்றும் அவர் கூறினார்.

12 நாட்களில் 7-வது முறையாக சவால்

கடந்த 12 நாட்களில் ஏழாவது முறையாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி நேரடி விவாதத்திற்கான சவாலை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் விவசாயச் சட்டங்கள், வாக்குத் திருட்டு புகார், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை, சீனா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தன்னைப் பேச அனுமதிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நீண்ட உரைகள் இல்லாமல், இருவரும் நேருக்கு நேர் அமர்ந்து தங்களது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் வகையில் விவாதம் அமைய வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மறுப்பு

ராகுல் காந்தி கடந்த 2023-ஆம் ஆண்டிலும் தனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாகக் குற்றம்சாட்டியிருந்தார். உளவுத்துறை அதிகாரிகள் சிலர் தொலைபேசியில் பேசும்போது கவனமாக இருக்கும்படி தன்னிடம் அறிவுறுத்தியதாகவும் அப்போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போதைய குற்றச்சாட்டுகளையும் மத்திய அரசு மறுத்துள்ளது. இதற்கிடையே, ராகுல் காந்தியின் விவாதக் கோரிக்கைக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்றம் ஏற்கனவே தயாராக இருக்கும்போது, பிரதமரிடம் வேறு இடத்தைத் தேர்வு செய்யுமாறு ராகுல் காந்தி ஏன் கேட்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தியின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு இதுவரை சரிபார்க்கக்கூடிய தொழில்நுட்ப ஆதாரம் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முயற்சிகளால் உலகம் முழுவதும் பிரபலமான யோகா! – பிரதமர் மோடி பெருமிதம்

MUST READ