Homeசெய்திகள்கட்டுரைகாரை வழிமறித்த நிருபர்கள் முதல் காப்பாற்றப்பட்ட கேசட் வரை: ஊடக வரலாற்றின் அரிய தருணங்களைப் பகிர்ந்த...

காரை வழிமறித்த நிருபர்கள் முதல் காப்பாற்றப்பட்ட கேசட் வரை: ஊடக வரலாற்றின் அரிய தருணங்களைப் பகிர்ந்த ராஜா வாசுதேவன்!

-

- Advertisement -

தமிழக ஊடக வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கியச் சம்பவங்கள், ஆட்சியதிகார நெருக்கடிகள், அரசியல் தலைவர்களின் கைது மற்றும் நிதி நிறுவன மோசடிகள் அம்பலமான தருணங்கள் குறித்து, சன் நியூஸ் முன்னாள் ஆசிரியரும் எழுத்தாளருமான ராஜா வாசுதேவன், ‘சாய் வித் சித்ரா’ நேர்காணலில் பல சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

2001 விழுப்புரம் அரிசிச் சர்ச்சை: காரை வழிமறித்த நிருபர்கள்

2001-ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசியில் புழுக்கள் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான செய்தி இரவு 8 மணி செய்தியில் ஒளிபரப்பானதை ராஜா வாசுதேவன் நினைவுகூர்ந்துள்ளார்.

இந்தச் செய்தியைப் படம்பிடித்த விழுப்புரம் நிருபர் சுரேஷ், அன்றிரவே கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்காமல் செய்தி சேகரித்த நிருபர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மறுநாள் தலைமைச் செயலகத்திலிருந்து வந்த ஜெயலலிதாவின் காரை 20 முதல் 30 நிருபர்கள் வழிமறித்துக் கேள்வி எழுப்பியதாகவும் விவரித்துள்ளார்.

இதையடுத்து, நிருபருக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக அவர் அன்றிரவே விடுவிக்கப்பட்டதாகவும் ராஜா வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

கலைஞர் கைது: உண்மைக் காட்சிகளைக் காப்பாற்றிய கேசட்

விழுப்புரம் அரிசிச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, அன்றிரவு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, அவசரமாகத் தகவல் கிடைத்து ஆலிவர் சாலை இல்லத்திற்குச் சென்ற அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

காவல்துறையினர் கலைஞரை அழைத்துச் சென்ற காட்சிகளை ஒளிப்பதிவாளர் பதிவு செய்திருந்தார். கலைஞரை வேனில் ஏற்றிய பிறகு, காவல்துறையினர் அந்தக் கேசட்டைக் கேட்டதாகவும், அப்போது சாமர்த்தியமாக வேறு கேசட்டைக் கொடுத்து உண்மையான காட்சிகள் அடங்கிய கேசட்டைப் பாதுகாத்ததாகவும் ராஜா வாசுதேவன் கூறியுள்ளார்.

அந்தக் காட்சிகள் அதிகாலை 4 முதல் 5 மணி அளவில் ஒளிபரப்பப்பட்டதால், கைது சம்பவத்தின் தீவிரம் தமிழகம் முழுவதும் தெரியவந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது அவரது இல்லத்தில் படம்பிடிக்கப்பட்ட சில காட்சிகளை நாகரிகம் கருதி ஒளிபரப்பாமல் தவிர்த்ததாகவும் தெரிவித்துள்ளார். கலைஞர் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு நகைச்சுவையாகப் பேசிய தருணங்கள், அதிகாலையில் எழுந்து வாசிப்பு மற்றும் எழுத்துப் பணிகளில் ஈடுபட்ட அவரது அன்றாட வாழ்க்கை குறித்த நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.

நிதி நிறுவன மோசடிகளை அம்பலப்படுத்திய அனுபவம்

1990-களுக்குப் பிறகு அதிகரித்த தனியார் நிதி நிறுவன மோசடிகள் குறித்த செய்திகளை வெளியிட்ட அனுபவங்களையும் ராஜா வாசுதேவன் எடுத்துரைத்துள்ளார்.

குறிப்பாக, சினேகம் பைனான்ஸ், அனுபவ பவுண்டேஷன் நடேசன் தொடர்பான விவகாரங்கள் மற்றும் ஈரோடு–கோவை பகுதிகளில் நடைபெற்ற ஈமுக்கோழி வளர்ப்புத் திட்ட மோசடி உள்ளிட்டவற்றை அம்பலப்படுத்திய அனுபவங்களை அவர் விவரித்துள்ளார்.

அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் போதிய புரிதல் இல்லாமல் முதலீடு செய்வதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பத்திரிகைப் பணி, குடும்ப வாழ்க்கை: மனம் திறந்த ராஜா வாசுதேவன்

1995-ல் பிரேமானந்தா தொடர்பான செய்திகளை வெளிக்கொண்டு வந்த அனுபவங்களையும் நேர்காணலில் அவர் பகிர்ந்துள்ளார். செய்தித் துறையில் பணியாற்றியதால் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தில் ஏற்பட்ட சிரமங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

மேலும், தனது மாமனார் ஐ. சண்முகநாதனின் பத்திரிகைப் பணிப் பின்னணி குறித்தும் அவர் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றின் முக்கியத் திருப்பங்கள், செய்தியாளர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் மற்றும் புலனாய்வுச் செய்திகளின் பின்னணியில் இருந்த அனுபவங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த நேர்காணல் அமைந்துள்ளது.

“வ.உ.சி. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பேராளுமை!” – 40 ஆண்டுகால ஆய்வு அனுபவங்களைப் பகிர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஆ.ரா. வேங்கடாசலபதி!

MUST READ