தமிழீழ மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த இலங்கைத் தமிழ் அரசியல் பிரமுகர் சிவாஜிலிங்கம் மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கம் கடந்த 14-ஆம் தேதி இயற்கை எய்திய செய்தி தமக்குத் தாமதமாகத் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள வைகோ, அவரது மறைவு தன்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், சிவாஜிலிங்கம் எண்ணம், பேச்சு, எழுத்து மற்றும் மேடை உரை என அனைத்திலும் சிறந்து விளங்கியவர் என்றும், இலங்கை நாடாளுமன்றம் மற்றும் வடக்கு மாகாண சபையில் தமிழீழ மக்களின் உரிமைகளுக்காக வலுவாகக் குரல் கொடுத்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழீழ ஆதரவு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்
தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் தனது இல்லத்திற்கு வந்து நீண்ட நேரம் உரையாடுவார் என்றும், மறுமலர்ச்சி திமுக நடத்திய தமிழீழ ஆதரவு பொதுக்கூட்டங்கள் மற்றும் அறப்போராட்டங்களில் பங்கேற்று உரையாற்றியவர் என்றும் வைகோ நினைவுகூர்ந்துள்ளார்.
உடல்நலக் குறைபாடுகள் காரணமாக அதிகம் பயணம் செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்த நிலையிலும், தமிழீழ மக்களின் உரிமைகளுக்காக சிவாஜிலிங்கம் தனது பயணங்களையும் பொதுப்பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பார்வதி அம்மாள் சிகிச்சைக்கு உதவிய சிவாஜிலிங்கம்
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, அவரைச் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததில் சிவாஜிலிங்கம் முக்கியப் பங்காற்றியதாக வைகோ தெரிவித்துள்ளார்.
பின்னர் பார்வதி அம்மாள் தமிழ்நாட்டில் சிகிச்சை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, தானும் பழ.நெடுமாறனும் விமான நிலையத்திற்குச் சென்று அவரை வரவேற்றதாகவும், சென்னையில் தங்க வைத்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்ததாகவும் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆனால், அன்றைய சூழலில் பார்வதி அம்மாள் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படாமல் மீண்டும் சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள வைகோ, இதற்கு அப்போதைய மத்திய மற்றும் தமிழக அரசுகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.
பிரபாகரனின் பெற்றோர் மறைவின்போதும் தொடர்பில் இருந்தவர்
பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை மறைந்தபோது, அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றிருந்த மக்களிடம் ஒலிபெருக்கி மூலம் தனது இரங்கல் உரையைத் தொலைபேசி வழியாகப் பேசுமாறு சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டதாக வைகோ தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகோளின்படி சென்னையில் இருந்தபடியே சுமார் அரை மணி நேரம் இரங்கல் உரையாற்றியதாகவும் நினைவுகூர்ந்துள்ளார்.
அதேபோல், பார்வதி அம்மாள் மறைந்தபோதும் அவரது இறுதிச்சடங்கின்போது ஈழத்தமிழர்கள் மத்தியில் தனது இரங்கல் உரை ஒலிபரப்ப ஏற்பாடு செய்ததாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
பார்வதி அம்மாளின் இறுதிச்சடங்கின்போது இலங்கை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மனிதநேயமற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் வைகோ தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.
நவம்பர் 27-ல் வீரவணக்க நிகழ்வு
சிவாஜிலிங்கம் தனது உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் தமிழீழ மக்களுக்காகத் தொடர்ந்து செயல்பட்டவர் என்றும், அவருடன் பலமுறை உரையாடியதையும் சென்னையில் சந்தித்ததையும் வைகோ நினைவுகூர்ந்துள்ளார்.
“சுதந்திரத் தமிழீழத்திற்காக ஓங்கி முழக்கமிட்ட ஒரு குரல் நிரந்தரமாக நின்றுவிட்டது” என வேதனை தெரிவித்துள்ள அவர், தமிழீழ மக்களின் தியாக வரலாற்றில் சிவாஜிலிங்கத்தின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வரும் நவம்பர் 27-ஆம் தேதி மறுமலர்ச்சி திமுக சார்பில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்ச்சியில் சிவாஜிலிங்கத்திற்கு வீரவணக்க நிகழ்வும் நடத்தப்படும் என வைகோ அறிவித்துள்ளார்.
