அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இரு பெண் வேட்பாளர்களும் சமமான வாக்குகளைப் பெற்றதால், நாணயத்தைச் சுண்டிப்போட்டு வெற்றியாளரைத் தேர்வு செய்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புளோரிடா மாகாணத்தின் அட்லாண்டிக் பீச் (Atlantic Beach) நகர கமிஷனர் பதவிக்கான தேர்தல் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜெனிபர் லாக்னர் (Jennifer Lagner), லிசா ஹெரால்டு (Lisa Herrold) ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.
வாக்குகள் எண்ணப்பட்டபோது இருவரும் தலா 3,162 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் இயந்திரம் மூலமாகவும், கைகளால் நேரடியாகவும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தினர். ஆனாலும் முடிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
டாஸ் போட்டு வெற்றியாளரைத் தேர்வு செய்த அதிகாரிகள்!
இதனால் புளோரிடா மாகாண சட்டத்தின்படி, நாணயத்தைச் சுண்டிப்போட்டு வெற்றியாளரைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி ஜாக்சன்வில்லில் உள்ள டுவால் கவுண்டி தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் இரு வேட்பாளர்களும் பங்கேற்றனர். சிறந்த மூன்று சுற்றுகளில் இரண்டு சுற்றுகளில் வெற்றி பெறுபவர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என விதிமுறை வகுக்கப்பட்டது.
முதல் சுற்றில் லிசா ஹெரால்டு நாணயம் தலை விழும் எனக் கணித்தார். ஆனால், நாணயம் பூ விழுந்ததால் ஜெனிபர் லாக்னருக்கு முதல் வெற்றி கிடைத்தது.
தொடர்ந்து இரண்டாவது சுற்றில் ஜெனிபர் லாக்னர் தலை விழும் எனக் கணித்தார். அவர் கணித்தபடியே நாணயம் தலை விழுந்தது. இதனால் தொடர்ந்து இரண்டு சுற்றுகளிலும் வெற்றி பெற்ற ஜெனிபர் லாக்னர், தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். மூன்றாவது சுற்று நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
20 விநாடிகளில் முடிந்த தேர்தல் வெற்றி!
பல நாட்களாக நீடித்த தேர்தல் முடிவு தொடர்பான இழுபறி, இறுதியில் வெறும் 20 விநாடிகளில் முடிவுக்கு வந்தது. வெற்றி பெற்ற ஜெனிபர் லாக்னருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லிசா ஹெரால்டும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தேர்தல் நடைமுறைகள் குறித்தும், சம வாக்குகள் கிடைக்கும் சூழலில் சட்டப்படி பின்பற்றப்படும் தீர்வு முறைகள் குறித்தும் கவனத்தை ஈர்த்துள்ளது.
