Homeசெய்திகள்உலகம்வணிகக் கப்பல் தாக்குதலை நிறுத்துக: ஐ.நா. வில் இந்தியா வலியுறுத்தல்!

வணிகக் கப்பல் தாக்குதலை நிறுத்துக: ஐ.நா. வில் இந்தியா வலியுறுத்தல்!

-

- Advertisement -

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் மாலுமிகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச கடல் வழித்தடங்களில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை விரைவாக மீட்டெடுக்க வேண்டும் என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் திங்கள்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி, ரஷ்யா – உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், அதன் தாக்கம் அந்தப் பிராந்தியத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை என்று தெரிவித்தார்.

உலக நாடுகளின் பொருளாதாரங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதால், உணவு, எரிபொருள், உரம் மற்றும் வர்த்தகப் போக்குவரத்திலும் இந்தப் போரின் பாதிப்புகள் உணரப்படுவதாகக் குறிப்பிட்டார்.

போர் காரணமாக விவசாயம் பாதிக்கப்படுவது, மக்கள் இடம்பெயர்வது, உள்கட்டமைப்புகள் சேதமடைவது, மனிதாபிமான உதவிகள் சென்றடைவதில் தடைகள் ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன.

இதன் தாக்கம் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிலும் எதிரொலிக்கிறது என்றார்.

உணவு மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு:

கருங்கடல் பிராந்தியமும் இந்தியாவும் இணைந்து உலகின் மொத்த தானிய உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளதாக ஹரிஷ் பர்வதனேனி தெரிவித்தார். அதேபோல், உலகளாவிய கோதுமை, மக்காச்சோளம் மற்றும் பார்லி ஏற்றுமதியில் ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளின் பங்கு கணிசமானது என்றும் கூறினார்.

எனவே, கருங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படுவது உலகின் பல்வேறு நாடுகளின் உணவுப் பொருள் விநியோகத்தையும் பாதிக்கும். குறிப்பாக, உணவு, எரிபொருள் மற்றும் உரத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் உலக தெற்குப் பகுதி நாடுகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன என்றார்.

மனிதாபிமான உதவிகள் தடையின்றிச் சென்றடைவதையும், பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகள் பாதுகாக்கப்படுவதையும், சர்வதேச நீர்வழிகளில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து தொடர்வதையும் பாதுகாப்பு கவுன்சில் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்திய மாலுமிகள் உயிரிழப்பு:

கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களில் இந்திய மாலுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். ஜூலை 18-ம் தேதி ‘எம்.வி. ஓமோர்பி’ (MV Omorfi) என்ற கப்பல் தாக்கப்பட்டதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். அக்டோபரில் ‘எம்.வி. ராயத் மம்மடோவ்’ (MV Royad Mammadov) கப்பல் தாக்கப்பட்டபோது அதில் மூன்று இந்தியர்கள் இருந்தனர்.

மேலும், ‘எம்.வி. கோல்டன் லியோ’ (MV Golden Leo), ‘எம்.வி. ஏஜிஎன் ராக்னர்’ (MV AGN Ragnar) ஆகிய இரு கப்பல்கள் மீதான தாக்குதல்களில் நான்கு இந்திய மாலுமிகள் உயிரிழந்ததுடன், இருவர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மாலுமிகளை மீட்கவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார்.

ரஷ்யா, உக்ரைனுடன் இந்தியா பேச்சுவார்த்தை:

கருங்கடல் பகுதியில் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, தானிய ஏற்றுமதி வழித்தடங்களைத் தடையின்றிப் பராமரிப்பது தொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா நேரடியாகப் பேசி வருவதாகவும் ஹரிஷ் பர்வதனேனி தெரிவித்தார்.

கப்பல் போக்குவரத்து மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, இந்தியாவும் லைபீரியாவும் இணைந்து ஐ.நா.வில் ‘கப்பல் போக்குவரத்து மற்றும் மாலுமிகளின் பாதுகாப்புக்கான நண்பர்கள் குழு’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளன.

இந்தத் தன்னார்வ அமைப்பு, சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO), சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆகியவற்றின் பணிகளுக்கு ஆதரவளிக்கும்.

போருக்கு விரைவில் முடிவு காண்பதற்கும், நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்.

பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலமே அமைதியை ஏற்படுத்த முடியும் என்றும், வணிகக் கப்பல் போக்குவரத்து, தானியங்கள் மற்றும் எரிசக்தி விநியோகம் தடையின்றி நடைபெறுவது உலக நாடுகளுக்கு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியா – சிங்கப்பூர் உறவை வலுப்படுத்திய சைமன் வோங்கிற்கு சிங்கப்பூரின் உயரிய விருது!

MUST READ