உலகப் புகழ்பெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியின் 75-வது ஆண்டு விழா போட்டியில், பியூர்ட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த 27 வயது ஜெனிஃபர் பாரெட்டோ பட்டம் வென்று மகுடம் சூடியுள்ளார்.

பியூர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரில் உள்ள ஜோஸ் மிகுவல் அக்ரெலாட் கொலிசியம் அரங்கில் நவம்பர் 24-ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ஐந்து பேரில் ஒருவராக ஜெனிஃபர் பாரெட்டோ வெற்றி பெற்றார். அவருக்கு முந்தைய ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் மகுடம் சூட்டினார்.
டொமினிகன் குடியரசைச் சேர்ந்த மெலிசா நூனெஸ் முதல் ரன்னர்-அப் இடத்தைப் பிடித்தார். வெனிசுலாவின் கிளாரா வேகாஸ் கோயட்ஸ், பிலிப்பைன்ஸின் பியா மில்லன்-விண்டோர்ஸ்கி, நியூசிலாந்தின் ஜார்ஜியா வாடிங்டன் ஆகியோரும் இறுதிச் சுற்றில் இடம்பிடித்தனர்.
யார் இந்த ஜெனிஃபர் பாரெட்டோ?
27 வயதான ஜெனிஃபர் பாரெட்டோ உளவியல் மற்றும் சமூகப் பணித்துறையில் கல்வி பயின்றவர். குடும்ப வன்முறை, குழந்தைகள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் சமூக நலப் பணிகளில் அனுபவம் பெற்றவர்.
சான் செபாஸ்டியன் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மிஸ் யுனிவர்ஸ் பியூர்ட்டோ ரிக்கோ 2026 போட்டியில் பங்கேற்ற அவர், கடந்த ஜூன் மாதம் அந்தப் பட்டத்தையும் வென்றார். பிப்ரவரி மாதத்தில்தான் முதன்முறையாக அழகிப் போட்டி மேடையில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணமான அவருக்கு பெனிலோப் என்ற ஏழு வயது மகள் உள்ளார். சமூகப் பணிகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் விரிவுபடுத்த மிஸ் யுனிவர்ஸ் மேடையைப் பயன்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பியூர்ட்டோ ரிக்கோவுக்கு ஆறாவது மிஸ் யுனிவர்ஸ் பட்டம்
இந்த வெற்றியின் மூலம் பியூர்ட்டோ ரிக்கோ நாட்டுக்கு ஆறாவது முறையாக மிஸ் யுனிவர்ஸ் மகுடம் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு 1970-ல் மரிசோல் மலகரெட், 1985-ல் டெபோரா கார்த்தி-டியூ, 1993-ல் தயானாரா டோரெஸ், 2001-ல் டெனிஸ் குயினோனெஸ், 2006-ல் சுலெய்கா ரிவேரா ஆகியோர் அந்த நாட்டுக்காக மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றுள்ளனர்.
கடந்த 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் பியூர்ட்டோ ரிக்கோவுக்கு மிஸ் யுனிவர்ஸ் மகுடம் கிடைத்துள்ளது. மேலும், 75-வது ஆண்டு விழா போட்டியைத் தனது சொந்த மண்ணில் நடத்திய பியூர்ட்டோ ரிக்கோ, தற்போது பட்டத்தையும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 போட்டியில் கும்பகோணம் தேஜா 3-ம் இடம் பிடித்து சாதனை!
