Homeசெய்திகள்தமிழ்நாடுமருத்துவர்கள் இல்லாததால் மாணவர் உயிரிழந்ததாகப் புகார் – தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

மருத்துவர்கள் இல்லாததால் மாணவர் உயிரிழந்ததாகப் புகார் – தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

-

- Advertisement -

வடுவூர் கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!மருத்துவர்கள் இல்லாததால் மாணவர் உயிரிழந்ததாகப் புகார் – தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

திருவாரூர் மாவட்டம், வடுவூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரும் கபாடி வீரருமான விக்னேஷ்வரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடுவூரைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ்வரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மாணவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த மாணவரை வடுவூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததே அவரது உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். மக்களின் உயிரைக் காக்க வேண்டிய அரசு மருத்துவமனைகள் மரணக் கூடங்களாக மாறி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

ஏழை, எளிய மற்றும் விளிம்புநிலை மக்கள் அதிகம் நம்பியிருக்கும் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக மதுபானக் கூடங்களை மேம்படுத்துவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், மருத்துவத்துறை அமைச்சரின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மருத்துவத் துறையின் அலட்சியத்தால் உயிரிழந்ததாகக் கூறப்படும் மாணவரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும், வடுவூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் வரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்தியுள்ளார்.

இயற்கை வளங்களும் பிளாஸ்டிக் பாட்டில் அபாயமும்: “அன்று ஏளனம் செய்தவர்கள் இன்று உணர்கிறார்கள்” – சீமான் காட்டம்

MUST READ