
உயர் சம்பளத்தில் ஐடி வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, 164 வெளிநாட்டினரை இந்தியாவுக்கு அழைத்து வந்து பாஸ்போர்ட்களைப் பறிமுதல் செய்து, ஆன்லைன் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபடுத்திய சர்வதேசக் கும்பலின் கொடூரச் செயல் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தில்லி காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பாதிக்கப்பட்ட 92 இந்தோனேசியர்கள் மற்றும் 72 மலேசியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கம்போடியா, மியான்மார், லாவோஸ் போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் மட்டுமே அதிகளவில் செயல்பட்டு வந்த ‘சைபர் ஸ்லேவ்’ எனப்படும்
சைபர் அடிமைத்தனக் கொடூரம், தற்போது இந்திய மண்ணிலும்
வேரூன்றியிருப்பது பாதுகாப்பு அமைப்புகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐடி வேலைக்காக இந்தியா வந்த 42 வயது மலேசிய நாட்டவர் ஒருவர், இக்கும்பலிடமிருந்து தப்பித்து மலேசியத் தூதரகத்திற்கும் தில்லி காவல்துறைக்கும் மின்னஞ்சல் வாயிலாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்தே இந்த விவகாரம் அம்பலமானது. இதன்பேரில் நொய்டா செக்டார் 136-ல் உள்ள சமரின் வணிக வளாக கால் சென்டரில் தில்லி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் உள்ள போலி வேலைவாய்ப்பு ஏஜென்சிகள் மூலம் வணிக விசாவில் அழைத்து வரப்பட்ட இவர்களின் பாஸ்போர்ட்கள், இந்தியா வந்திறங்கிய உடனேயே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நொய்டாவில் உள்ள தனியார் விடுதிகளில் அடைத்து வைக்கப்பட்ட இவர்கள், குடும்பத்தினருடன் பேசவோ சுதந்திரமாக வெளியே செல்லவோ அனுமதிக்கப்படாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டனர். 40-க்கும் மேற்பட்ட வாடகைக் கார்கள் மூலம் பலத்த கண்காணிப்பு வளையத்திற்குள் விடுதியிலிருந்து அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட இவர்களுக்கு, சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் பெண்களைப் போல போலிக் கணக்குகள் தொடங்கி, தங்கள் நாட்டைச் சேர்ந்த ஆண்களிடம் நட்பு வளர்க்கப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அதிக லாபம் தருவதாக ஆசை காட்டி, போலி செயலிகள் மற்றும் இணையதளங்கள் வழியாகப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்யத் தூண்டி கோடிக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டுள்ளது. மோசடி வேலைகளுக்கு மறுப்பவர்களையும் இலக்கை முடிக்காதவர்களையும் அடியாட்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இந்த மோசடி வலையமைப்பில் முக்கியப் பங்கு வகித்த மலேசியாவின் நெகிரி செம்பிலான் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் டான் குவான் வெய் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அலுவலகம், கார்கள் மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்த சுனில்குமார், சுஷில் பாட்டி ஆகிய இரு இந்தியக் கூட்டாளிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, தலைமறைவாக உள்ள அவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். சோதனையின் போது அந்த அலுவலகத்திலிருந்து 174 பாஸ்போர்ட்கள், 355 செல்போன்கள், 168 கணினிகள், 26 மடிக்கணினிகள், 31 சர்வதேச சிம் கார்டுகள், 22 இந்திய சிம் கார்டுகள் மற்றும் பல சர்வர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட 164 பேரும் குற்றவாளிகளாகக் கருதப்படாமல் பாதிக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட தூதரகங்கள் வாயிலாகத் தாயகம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
