
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றங்களில் சமூக நீதியும், வெளிப்படைத்தன்மையும் பின்பற்றப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கடிதம் எழுதியுள்ளார்.
கொலிஜியம் அமைப்பின் பரிந்துரை அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற விமர்சனம் நீண்ட காலமாக எழுந்து வருகிறது. முன்னாள் நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களின் குடும்பத்தினர், ஜூனியர் வழக்கறிஞர்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாக வழக்கறிஞர்கள் சங்கங்களும் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றன.
இச்சூழலில், குடியரசுத் தலைவருக்கு பி.ஆர். கவாய் எழுதியுள்ள மூன்று பக்க கடிதத்தில் பல்வேறு முக்கிய புள்ளிவிவரங்களையும் அதிருப்திகளையும் முன்வைத்துள்ளார்.
பிரதிநிதித்துவத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள்
மக்கள் தொகையில் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே உச்ச நீதிமன்றத்தில் 40 சதவீதத்திற்கும் மேல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்ட 715 உயர் நீதிமன்ற நீதிபதிகளில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 22 பேர், பழங்குடியினர் 16 பேர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) 89 பேர், சிறுபான்மையினர் 37 பேர் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த தரவுகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2021 ஜனவரி முதல் 2026 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் நியமிக்கப்பட்டவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் 14 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய நியமனங்களால் விளிம்புநிலை மக்கள் மட்டுமின்றி, மற்ற முன்னேறிய சமூகங்களைச் சேர்ந்தவர்களும் புறக்கணிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இடமாற்றங்களில் அதிருப்தி
சிறு மாநில உயர் நீதிமன்றங்களுக்குத் தண்டனை நடவடிக்கையாகப் பலமுறை மாற்றப்பட்ட நீதிபதி ஒருவர், பெரிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை கவாய் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம், அவரை நியமிப்பதற்காகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்த தலைமை நீதிபதி ஒருவர் சிறிய மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருப்பது, நேர்மையான நீதிபதிகளின் மன உறுதியைச் சிதைக்கும் செயல் என அவர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை
கொலிஜியத்தின் பரிந்துரை இறுதியானது என்றாலும், அந்த அமைப்பு யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்படாதது என்றாகிவிடாது என கவாய் வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 124(2)-ன் கீழ் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவரிடமே உள்ளதால், நீதித்துறையில் சமமான பிரதிநிதித்துவத்தையும் அரசியலமைப்பு விழுமியங்களையும் காக்க உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
