2023- 24 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தற்போதைய மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்தார்.

ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “விவசாயிகள், பெண்கள் உட்பட அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான வளர்ச்சியை உருவாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சாதனைகளை உலகமே பாராட்டுவதால் தலைநிமிர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறேன். கொரோனா காலத்தில் யாரும் பட்டினியில் இருக்கக்கூடாது என்பதற்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 2023 ஜனவரி 1 முதல் மேலும் ஓராண்டுக்கு அந்தியோதயா திட்டத்தின்கீழ் உணவு தானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் 28 மாதங்களில் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. முந்தைய பட்ஜெட்களில் போடப்பட்ட வளர்ச்சிக்கான அடித்தளத்தின் மீது தற்போதைய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்து 5 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2014 ஆம் ஆண்டி மோடி அரசு பதவியேற்றப்பின் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பின் 9 கோடி புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 11.17 கோடி கழிவறைகள் கட்டி சாதனை படைத்துள்ளோம். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், இதர பிற்படுத்தப்பட்டோர் எஸ்.சி., எஸ்.டி. என அனைத்து பிரிவினர் நலனுக்காக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
