ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை வாபஸ் பெற பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் எடப்பாடி அணியும் ஓபிஎஸ் அணியும் வேட்பாளர்களை களம் இறக்கினர். இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் ஒருமித்த வேட்பாளரை தேர்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலமாக ஆதரவு கடிதம் பெற்று தென்னரசுவை வேட்பாளராக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்றும் நாளையும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் சுற்றறிக்கை வழங்கப்பட்டு ஆதரவு கடிதம் பெறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவில் பழனிசாமி தரப்புக்கே அதிக ஆதரவு இருப்பதால் பன்னீர்செல்வம் தரப்புக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதனால் வேட்பாளரை வாபஸ் பெற பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளருக்கு ஆதரவு கிடைக்காமல், நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் வாபஸ் பெற திட்டமிட்டுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவால் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது வேட்பாளர் தேர்வுக்காக பழனிசாமி தரப்பில் வழங்கப்படும் படிவத்தை ஏற்பதா? நிராகரிப்பதா? என ஆலோசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
