ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஆயில் டேங்கரை சுத்தம் செய்ய சென்ற கூலி தொழிலாளர்கள் ஏழு பேர் விஷவாயு தாக்கி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பெத்தபுரம் மண்டலம் ஜி.ராகம்பேட்டாவில் அம்பட்டி சுப்பண்ணா என்பவர் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை ஒரு ஆண்டுக்கு முன்பு தொடங்கினார். இந்த தொழிற்சாலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சில தொழிலாளர்கள் வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் சிலர் ஒருவர் பின் ஒருவராக ஆயில் டேங்கரை சுத்தம் செய்வதற்காக அதில் இறங்கியபோது விஷவாயு தாக்கி மூச்சு திணறி இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் தொழிற்சாலைக்கு வந்து ஆய்வு செய்தனர். இறந்தவர்களில் 5 பேர் படேரு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், மேலும் இருவர் பெத்தபுரம் மண்டலம் புலிமேருவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்காதது தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
