ட்விட்டர் சிஇஓ பொறுப்பு தனது வளர்ப்பு நாய்க்கு வழங்கப்பட்டிருப்பதாக எலான் மஸ்க் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டரில் யாரோ ஒரு பயனர் ‘நீங்கள் ட்விட்டரை வாங்க வேண்டும்’ என்று எலான் மஸ்கை டேக் செய்து பதிவிட்டிருந்தார். அதற்காக உண்மையிலேயே அந்த நிறுவனத்தை வாங்குவதாக அதிரடியாக அறிவித்தார் எலான் மஸ்க். ஆனால் அதனை நேரடியாக செய்யாமல், அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் சரியில்லை, ட்விட்டரில் கருத்து சுதந்திரம் இல்லை, செயலியில் பாதுகாப்பு இல்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி நீதிமன்றத்தின் படியேற வைத்தார். இறுதியாக நீங்கள் ட்விட்டரை வாங்கியே ஆக வேண்டும் என்று நீதிமன்றங்கள் கூற, சுமார் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கொடுத்து அந்த நிறுவனத்தை தன் வசப்படுத்தினார். உலக அளவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களும் இவருடையது தான்.


தன்னிடம் இருக்கும் பணத்தை செலவழிப்பது எப்படி என்று தெரியாமல் ட்விட்டரை அவர் விளையாட்டாக வாங்கிவிட்டார் என்று, எண்ணுவது போன்றே அவரது செயல்கள் அனைத்தும் இருந்தன. தொடக்கமே இப்படியா என ட்விட்டர் ஊழியர்கள் அதிர்ச்சியாகும் வகையில், முதல் நாளே கையில் வாஷ்பேஷனுடன் அலுவலகத்திற்குச் சென்றார். அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு . ‘Let it Sink’என்று கேப்ஷனும் கொடுத்திருந்தார்.. இனி twitter நிறுவனம் ஜாலியாக இருக்கப்போகிறது என ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்க, அதை உடைக்கும் விதமாக அதிரடியாக தனது மற்றொரு முகத்தை காட்டத் தொடங்கினார் எலான் மஸ்க்.

எடுத்த எடுப்பிலேயே ட்விட்டர் சிஇஓ உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தது, ஆட்குறைப்பு, 12 மணி நேரம் வேலை, வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை ரத்து என ஊழியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக கொடுத்தார். ஊழியர்கள் ஒரு பக்கம் இருக்க, பயனர்கள் ஷாக்காகும் வகையில் இனி ப்ளூ டிக்குகளுக்கு இலவசம் இல்லை என்று அறிவித்தார். ப்ளூ டிக் வைத்திருக்கும் பயனர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் கட்டணமாக செலுத்த வேண்டும், இல்லையேல் ப்ளூ டிக் பறிக்கப்படும் என்றார். இதனால் ஊழியர்கள் மற்றும் பயனர்கள் என அனைத்து தரப்பினரிடமும் அதிருப்தியை சம்பாதித்தார்.
அப்போது, ‘நீங்கள் ட்விட்டர் சிஇஓ பொறுப்பில் இருந்து விலக வேண்டும்’என்று பயனர் ஒருவர் கூறினார். இதனையடுத்து, ’நான் ட்விட்டர் சிஇஓ பொறுப்பில் இருந்து வில வேண்டுமா? அல்லது வேண்டா? என்று ட்விட்டரிலேயே கருத்துக்கணிப்பு நடத்தினார். இதில் பயனர்கள் பெரும்பாலானோர் நீங்கள் தலைமை பொறுப்பில் இருந்து விலங்குகள் என்றே அதிகம் வாக்களித்து இருந்தனர். 57% ஓட்டுக்கள் அவருக்கு எதிராக பதிவாகின. எலான் மஸ்க் பதவி விலக போகிறாரா? என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ‘இந்த பதவிக்கு ஒரு முட்டாள் கிடைத்தவுடன் தான் விலகிவிடுவேன்’என்று சமாளித்தார்.

ட்விட்டரை வாங்கியது முதலே எலன் மஸ்கின் ஒவ்வொரு செயலும், கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. அனைவரது கவனத்தையும் பெறுவதற்காக தொடர்ந்து எதையாவது அறிவித்து வரும் மஸ்க், தற்போது சிஇஓ பொறுப்பு தனது நாய்க்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறி மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ட்விட்டர் சிஇஓ என்று அச்சிடப்பட்டுள்ள டி.சர்ட்டை ஃப்லோக்கி எனப்படும் அவரது வளர்ப்பு நாய்க்கு அணிவித்து, அது சிஇஓ நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். பயனர்களும் அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக, இது போன்ற ஒரு சிறப்பான தலைமை எந்த நிறுவனத்திற்கும் அமையவில்லை என்று கிண்டலடித்து வருகின்றனர். ஒரு பக்கம் அவரது விளையாட்டுக்களை சில பயனர்கள் ஏற்றுக்கொண்டாலும், ஒரு பெரும் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் அந்த பதவிக்கு ஏற்ற பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் மஸ்க்கை விமர்சித்து வருகின்றனர்.
The new CEO of Twitter is amazing pic.twitter.com/yBqWFUDIQH
— Elon Musk (@elonmusk) February 15, 2023


