சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய சட்டமன்ற வளாகத்துடன் கூடிய தலைமைச் செயலகத் திட்டத்திற்காக, அப்பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளை இடிக்கத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முறைப்படி டெண்டர் கோரியுள்ளது.


25 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகம்
சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில், அதிநவீன சட்டமன்ற வளாகத்துடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே அரசாணை வெளியிட்டிருந்தது.
இதன்படி, சென்னை மாவட்டம் மயிலாப்பூர் வட்டத்திற்கு உட்பட்ட R.S.No.4593/1, 4593/29 மற்றும் 4593/33 (Block No.102) ஆகிய சர்வே எண்களைக் கொண்ட நிலப்பரப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
96 குடியிருப்புகளை இடிக்கப் புதிய டெண்டர்
புதிய தலைமைச் செயலகத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் ஒன்றான சர்வே எண் 4593/33-ல், சுமார் 3.82 ஏக்கர் பரப்பளவில் 96 அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்தக் குடியிருப்புகள் மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த நிலத்தைச் சீரமைத்து திட்டப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில், அங்குள்ள 96 அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் இடித்து அகற்றுவதற்கான ஒப்பந்தப்புள்ளியைத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கோரியுள்ளது.
தொடரும் மீனவர்கள், குடியிருப்பாளர்களின் போராட்டங்கள்
பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசாணை வெளியானது முதல் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் குடியிருப்பாளர்களும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியில், சேதமடைந்த 96 குடியிருப்புகளை இடிப்பதற்குத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் டெண்டர் கோரியுள்ளது. இதன் மூலம் புதிய தலைமைச் செயலகத் திட்டம் அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கி நகர்ந்துள்ளது.
